இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ஜோன்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பு வரவேற்பு!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று காலை உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அம்மாநில ஆளுநர் ஆச்சாசர்யா தேவ்ரத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இவர்களுடன் மாநில மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனிருந்தனர்.
இங்கிலாந்து பிரதமருக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நகரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் வரை 4 கி.மீ பாதையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை எங்கிலும் பாரம்பரிய குஜராத்தி நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளை குழுவினர் நடத்தினர்.
குஜராத்தில் ஒரு நாள் தங்கயிருக்கும் இங்கிலாந்து பிரதமர் அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய வணிகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். பிறகு, பஞ்மஹால் மாவட்டத்தில் உள்ள ஹலோலுக்கு அருகில் உள்ள பிரிட்டிஷ் கட்டுமான உபகரண நிறுவனமான ஜேசிபியின் உற்பத்தி நிலையத்திற்குச் செல்கிறார்.
தொடர்ந்து, குஜராத் பயோடெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் வளாகத்தை அவர் பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இங்கிலாந்து பிரதமர் ஜான்சான் தனது குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருவரும் இருநாட்டின் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.