தென்னிந்திய நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு
நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என்று நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் நடிகர் சங்க பொதுக்குழு முடிந்ததும் கூட்டாக தெரிவித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.
சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறும்போது, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் ரூ.30 கோடி வேண்டும். அந்த நிதியை எப்படி திரட்டுவது என்று ஆலோசித்தோம்.
வங்கியில் கடன் பெற பொதுக்குழுவில் அனுமதி வாங்கி இருக்கிறோம். விரைவில் கட்டிடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுப்போம்.
உள் அலங்காரத்தோடு சேர்த்து இன்னும் 40 சதவீத பணிகள் பாக்கி உள்ளது. நடிகர் சங்க கட்டிட பணிக்காக நடிகர்களிடமும் நிதி கேட்போம்.
கட்டிடம் கட்டி முடித்த பிறகு அதில் வரும் வருவாயில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ உதவிகள் வழங்குவோம். நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் அடையாளமாக இருக்கும் என்றனர்.