தாஜ்மஹாலுக்கு அடியில் சிவன் கோவிலா? வெளியான மர்மம்!
தாஜ்மஹாலின் பூட்டிய 22 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நினைவுச்சின்னம் ஒரு பழமையான சிவன் கோயில் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறியதை அந்த மனுவில் மேற்கோள் காட்டியுள்ளது. பாஜகவின் அயோத்தி பிரிவின் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த ரிட் மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. ரிட் மனுவில், இந்த நினைவுச்சின்னம் ஒரு பழைய சிவன் கோயில், முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் இடித்து கல்லறையாக மாற்றப்பட்டது என்று சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டினார்.
தாஜ்மஹால் பழமையான சிவன் கோயில் என்று பல இந்து அமைப்புகள் கூறி வருவதால், விசாரணை நடத்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர்கள் ராம் பிரகாஷ் சுக்லா மற்றும் ருத்ர விக்ரம் சிங் மூலம் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மஹாலின் அடித்தளம் மற்றும் மேல் தளங்களில் இருபதுக்கும் மேற்பட்ட மூடிய அறைகள் இருப்பதாகவும், அவை பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை என்றும் ரஜ்னீஷ் சிங் வாதிட்டார்.
அந்த அறைகளில் இந்து சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக அவர் கூறினார், இது தாஜ்மஹால் உண்மையில் ஒரு சிவன் கோயில் என்பதை நிரூபிக்கிறது என்றார்.
முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் மஹாலின் மரணத்திற்குப் பிறகு சிவன் கோயிலை அவரது நினைவிடமாக மாற்றினார் என்ற கூற்றைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்குமாறு வலியுறுத்தியது.
இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தை கோரியது. நான்கு மாடி கட்டிடத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சுமார் 22 அறைகள் நிரந்தரமாக பூட்டப்பட்ட அறைகள் உள்ளன.
தாஜ்மஹாலின் கதவுகள் மூடப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டு ஆர்டிஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.