பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

Nila
2 years ago
பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் இந்திய உயர்நீதிமன்றம் இன்று (18) முற்பகல் 10.30 க்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து, நீதியரசர்களான எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

பேரறிவாளன் தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கோபால் சங்கரநாராயணன் வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் மன்றாடியர் நாயகம் கே.எம்.நட்ராஜ் வாதிட்டார்.

இந்நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு திகதி குறிப்பிடாமல் குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

நீதியரசர் எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான ஆயம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.