கொடி இனத்தைச் சார்ந்த காய்வகை பூசணிக்காய் நற்பயன்கள்.....

#Health #Vegetable #Benefits
கொடி இனத்தைச் சார்ந்த  காய்வகை பூசணிக்காய் நற்பயன்கள்.....

‘உணவே மருந்து’ என்பதை நாம் நன்கு அறிவோம். காரணம், உணவு என்பது வெறுமனே பசியைப் போக்குவதற்காகவும், நாவின் சுவைக்காகவும் மட்டுமே உருவானது அல்ல. அதற்கு அப்பாலும் அபாரமான மருத்துவக் காரணங்கள் அதற்கு உண்டு. அதனால்தான் அர்த்தம் பொதிந்த இந்த சொற்றொடரை நம் முன்னோர் சொல்லி வைத்தனர். இந்த கருப்பொருளின் அடிப்படையிலேயே பல உணவுப் பொருட்களின் ரகசியத்தை இந்தத் தொடரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் பூசணியின் நற்குணங்கள் பற்றி இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம்.

கொடி இனத்தைச் சார்ந்த ஒரு காய்வகைதான் பூசணி. Cucurbita maxima என்பது இதன் தாவரப்பெயர் ஆகும். Red pumpkin, squash melon என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது  பூசணி. வெண்பூசணியை ஆயுர்வேதத்தில் ‘கூஷ்மாண்டம்’ என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள். உடல்  பலத்துக்காக வெண் பூசணியிலிருந்து தயாரிக்கப்படும் லேகியம், இதன் காரணமாகவே ‘கூஷ்மாண்ட லேகியம்’ என்று அழைக்கப் படுகிறது. இன்னொரு வகையான சர்க்கரைப் பூசணியே, ‘பரங்கிக்காய்’ என்று நம்மவர்களிடம் பெயர் பெற்றுள்ளது.

பூசணியில் இரண்டுவகை உண்டு. ஒன்று சர்க்கரைபூசணி, இன்னொன்று வெண்பூசணி. இந்த இரண்டு பூசணிகளுமே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்காகப் பயன்படுத்தப்படுவது போலவே, திருஷ்டி கழிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான வருடங்களாகவே நம் முன்னோர் பூசணியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பரங்கிக்காய் பற்றிய அகத்தியர் பாடல்

அனலழலை நீக்கும் அதிபித்தம் போக்குங்
கனலெனவே வன்பசியைக் காட்டும்
புனராரும்
மிக்கவையம் உண்டாகும் மென்கொடியே
எப்போதும்
சர்க்கரைப் பரங்கிக்காய் தான்.

அகத்தியர் குணபாடம்

உடற்சூடு, வெப்பு ஆகியவற்றை நீக்கும் தன்மையுடையது பரங்கிக்காய். அதிகமான பித்தத்தை நீக்கக்கூடியது. வயிற்றில் நெருப்பை வைத்தாற்போல பசியை உண்டாக்கக் கூடியது. உடலுக்கு உரத்தை உண்டாக்கும் என்று பாராட்டும் அகத்தியர், பூசணியை அதிகமாக உண்பதால் சீதள நோய்கள் உண்டாகக் கூடும் என்றும் தவறாமல் எச்சரிக்கிறார். வெண்பூசணியின் மருத்துவ குணங்கள் வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சகச் சளியை நீக்கவும், மூச்சிரைப்பைப் போக்கவும், சிறுநீரகக் கோளாறுகளுக்காகவும் பயன்படுகிறது.

நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும் இந்த முற்றிய காய்கள் பயன்படுகிறது. வெண்பூசணியின் விதையிலிருந்து பல மருத்துவ வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, வெண்பூசணியின் விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருட்கள் குடல் நோய்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை சில மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. சீன மருத்துவத்தில் வெண்பூசணியின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி, இருமல் ஆகிய நோய்களைப் போக்கப் பயன்படுத்துகின்றனர்.

வெண்பூசணியின் தண்டுப்பகுதியை முறையற்ற மாதவிலக்கை சீர் செய்யவும், சருமத்தில் மேற்புறத் தழும்பு களை குணப்படுத்தவும் பயன் படுத்துகின்றனர். அதேபோல், வேர்ப்பகுதியை மஞ்சள் காமாலை, சிறுநீர் பாதை எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். குளிர்ச்சியான குணம் கொண்ட பரங்கிக்காயின் சதைப்பற்றும் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதனாலேயே தீப்புண்களை ஆற்றவும், வீக்கங்களைக் கரைக்கவும் பரங்கிக்காயின் சதைப்பற்றை மருத்துவர்கள் உபயோகிக்கின்றனர்.

பரங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கக்கூடியது, நாடாப் புழு போன்ற வயிற்றுப்பூச்சிக்களை வெளித்தள்ளக் கூடியது, ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பி யின் வீக்கத்தைத் தடுக்கவல்லது. பரங்கிக் கொடியின் 100 கிராம் இலையில் சுண்ணாம்புச்சத்து  36.38 மி.கி. அளவும், மெக்னீசியம்  38.80 மி.கி. அளவும், இரும்புச்சத்து  2.04 மி.கி. அளவும், துத்தநாகச்சத்து  0.76 மி.கி. அளவும், செம்புச்சத்து  0.42 மி.கி. அளவும் அடங்கியுள்ளது.

பரங்கிக்காயின் விதையில் இருந்து பிரிக்கப்படும் எண்ணெயில் Sterols மற்றும் Triterpenoids ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் ஒற்றைத் தலைவலியையும் நரம்பு வலியையும் போக்கும் தன்மையுடையது.

பரங்கிக்காயில் அடங்கியிருக்கும் சத்துகள் 100 கிராம் பரங்கிக்காயில் பின்வரும் ஊட்டச்சத்துகள் அடங்கியிருக்கின்றன. எரிசக்தி (எனர்ஜி)  26 கலோரி, மாவுச்சத்து  6.50 கிராம், புரதச்சத்து  1.0 கிராம், கொழுப்புச்சத்து  0.1 கிராம், நார்ச்சத்து  0.5 கிராம் ஆகியவற்றுடன் வைட்டமின்களான ஃபோலேட்ஸ்  16 மைக்ரோகிராம், நியாசின்  0.600 மி.கி, பான்டோதெனிக் அமிலம்  0.298 மி.கி, பைரிடாக்ஸின்  0.061 மி.கி, ரிபோஃப்ளேவின்  0.110 மி.கி, தயாமின்  0.050 மி.கி, வைட்டமின் சி  9.0 மி.கி, வைட்டமின் ஈ  1.06 மி.கி, வைட்டமின் கே 1.1 மைக்ரோகிராம், நீர்ச்சத்துக்களான ‘சோடியம்’ 1 மி.கி,

பொட்டாசியம்  340 மி.கி, தாது உப்புக்களான சுண்ணாம்புச்சத்து  21 மி.கி, செம்புச்சத்து  0.127 மி.கி, இரும்புச்சத்து  0.80 மி.கி, மெக்னீசியம்  12 மி.கி, மாங்கனீசு  0.125 மி.கி, பாஸ்பரஸ்  44 மி.கி, செலினியம்  0.3 மை.கி, துத்தநாகம் 0.32 மி.கி, உயிர்ச்சத்துகளான கரோட்டீன் ஏ  515 மைக்ரோ கிராம், கரோட்டீன் பி  3100 மைக்ரோ கிராம், கிரிப்டோ சாந்தின் பி  2145 மைக்ரோகிராம்.

பரங்கிக்காய் சாறு தரும் மருத்துவப் பயன்கள்

பரங்கிக்காய்ச் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம் சேர்க்கிறது. சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்தவர்களும், பித்தப்பையில் கோளாறு உடையவர்களும் தினம் 3 வேளை என பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் அளவு 10 நாட்கள் பருகுவதால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கோளாறுகள் தணியும்.

பரங்கிச் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது. இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது. பரங்கிச்சாறு ஜீரணத்தைத் தூண்டி, மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. பரங்கிச்சாறு அமிலச் சத்தினைக் குறைக்கக்கூடியது. புண்களை ஆற்றக்கூடியது. இது சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பாதையையும் சீர் செய்யக்கூடியது.

பரங்கிச்சாறு லேசான மயக்கமூட்டும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனால் தூக்கமின்மையைப் போக்கவல்லது. ஒரு டம்ளர் பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் தூக்கம் தூண்டப்படுகிறது. பரங்கிச்சாற்றில் Pectin எனும் வேதிப் பொருள் அடங்கியுள்ளதால் இதைக் குடிப்பதனால் கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெற இயலுகிறது.

பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குக் குளிர்ச்சி தரும் சிறந்த பானமாக அமைகிறது. இதனால் உடல் உஷ்ணம் தணிகிறது. கருத்தரித்த பெண்களுக்கு வரும் சில கர்ப்பகாலப் பிரச்னைகளுக்கும் பரங்கிச் சாற்றை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கல்லீரலைப் பற்றிய நுண்கிருமியான ஹெப்படைட்டிஸ்ஏவை போக்கக்கூடியது பரங்கிச் சாறு. இதனால் கல்லீரலின் செயல்பாடுகள் மேன்மை அடைகின்றன.

பரங்கிச்சாற்றில் அடங்கியிருக்கும் ‘வைட்டமின் ‘சி’ சத்து’ நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தந்து பல்வேறு நோய்களினின்று பாதுகாப்பைத் தருகிறது. பரங்கிச்சாற்றிலுள்ள வைட்டமின்களான ‘ஏ’, ‘சி’ மற்றும் ‘ஈ’ மேலும் துத்தநாகம் ஆகியன கொப்புளங்கள், கட்டிகள், வீக்கங்கள், வண்டுக்கடி ஆகியவற்றினின்று சீக்கிரத்தில் குணமடையச் செய்கின்றன.பரங்கிச் சாற்றை தலைக்குத் தடவி வைத்திருந்து குளிப்பதால் தலைமுடி கொட்டுவது தவிர்க்கப்படுகிறது.

பூசணி மருந்தாகும் விதம் பரங்கிக்காயின் உட்புறச் சதையை விதைகள் நீக்கிய பின் வேகவைத்துப் பின் பிசைந்து பசையாக்கிப் புண்களின் மீது வைத்துக் கட்டுவதால் நாட்பட்ட ஆறாத புண்களும் ஆறும். பரங்கிக்காயின் விதைகளைத் தோல் நீக்கிப் பொடிசெய்து 5 முதல் 10 கிராம் அளவுக்கு தினம் இருவேளை உள்ளுக்கு எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கற்கள் உண்டாவது தவிர்க்கப்படுகிறது.

பரங்கிக்காயின் பழுத்த காம்பை எடுத்து நன்கு உலர்த்தி நீரில் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க நச்சுக்கள் நீங்கும். 2030 கிராம் விதையை எடுத்து குடிநீரில் இட்டு தினம் இரண்டு வேளை குடித்து வர வெள்ளைப்போக்கு குணமாகும், சிறுநீரும் தாராளமாக இறங்கும். வெண்பூசணியைத் தொடர்ந்து மூன்று மாதம் உணவோடு சேர்த்து வர இளைத்த உடம்பு பருக்கும். பாதரசம் போன்ற நச்சுக்கள் கலந்ததால் ஏற்பட்ட உட்புற புண்கள் விரைவில் குணமாகும்.

பூசணிக்காயின் சதைப் பகுதியை எடுத்து நன்கு வேக வைத்து அதனோடு சிறிது கற்கண்டு சேர்த்து தினம் மூன்று வேளை எனச் சாப்பிட்டு வர கல்லீரல் பாதிப்பால் வந்த மஞ்சள்காமாலை குணமாகும். சிறுநீரும் தடையின்றி சீராக வெளியேறும். வெண்பூசணியின் சாறு 30 மி.லி. அளவு எடுத்து அதனுடன் 10 மி.லி. தேன் கலந்து உள்ளுக்குப் பருகுவதால் இதயம் பலப்படும், ரத்தமும் சுத்தமாகும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4