இன்றைய வேத வசனம் 25.06.2022: எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 25.06.2022: எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே

அன்று சமாரியா பட்டணத்தின் வாசலிலே அதிகாலையிலே ஒரே பரபரப்பு! காரணம், ஓர் நற்செய்தி அந்தப் பட்டணத்தாருக்கு. அங்கு நடந்தது என்ன?

பெனாதாத் என்னும் சீரியா தேசத்து ராஜா இஸ்ரவேல் ராஜாவுக்கு எதிராக வந்து சமாரியா பட்டணத்தை முற்றுகை போட்டான். அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று.

ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயிறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படும் மட்டும் அதை முற்றுகை போட்டார்கள்.

தேசத்திலே பஞ்சத்தின் கொடுமை உச்சம் கண்டது. ராஜாவாகிய ஆண்டவனே, என்னை ரட்சியும் என்று அபயக்குரல் ஒலித்தது.

என்ன என்று கேட்ட ராஜா தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொள்ளும் செய்தி, அது துர்ச்செய்தி. 
அந்தப் பெண் என்ன சொல்லுகிறாள்: “ராஜாவே, இந்த ஸ்திரீ என்னை நோக்கி, உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம், நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.

அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன். அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள். எத்தனை பேரதிர்ச்சியூட்டும் செய்தி!
ராஜா தன் சரீரத்தில் இரட்டுடுத்தியிருந்தான். அப்படிப்பட்ட அகோர நிலை மறுநாள் காலை ஒரு மகிழ்ச்சியின் செய்தியாக சமாரியா பட்டணத்திற்கு மாறினது ஓர் அற்புதம்!

நான்கு குஷ்டரோகிகள் பட்டணத்திற்கு வெளியே உணவு கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தோன்றிய அந்த ஆபத்தான துணிவுதான் நற்செய்திக்குக் காரணமாக அமைந்தது.
இங்கு உணவில்லாமல் சாவதை விட எதிரிகளின் இராணுவத்திற்கே போவோம். அவர்கள் உயிரோடு வைத்தால் வாழ்வோம், இல்லாவிட்டால் சாவோம் என்று துணிந்து சாவைச் சந்திக்கச் சென்றவர்கள் கண்டது ஆச்சரியம்.

அந்தக் குஷ்டரோகிகள் எதிரிகளின் பாளையத்தின் முன்னணி மட்டும் வந்தபோது ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்துப் புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பி வந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்துவைத்து அதன் பின் தான் தாங்கள் செய்வதைக் குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். 

முதலாவது அவர்கள் கண்டது பசியின் அகோரத்தினால் சாவுக்குப் போராடிக் கொண்டிருந்த அவர்களுக்குக் கிடைத்த நல்ல உணவு அவர்களுக்கு நற்செய்தி.
அதன் பின் அவர்கள் குடும்பத்தாருக்கும் அவர்கள் எதிர்காலத்திற்கும் தேவையைச் சந்திக்கும் நற்செய்தி.
அத்துடன் முடிவடையவில்லை. அதன் பின் தான் அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் சிந்தனையில் வருவது என்ன?

பட்டணத்துக்குள்ளே பயத்துடன் பதுங்கிக் கிடந்த தங்கள் தேசத்து மக்கள். அவர்களும் பசியோடே போராடிக்கொண்டிருக்கிறார்களே என்ற விழிப்புணர்வு. அது அவர்களைச் சிந்திக்க வைத்தது, செயல்படவும் வைத்தது.

தங்களுக்குக் கிடைத்த நற்செய்தியை என்ன செய்தார்கள்? #II_இராஜாக்கள் 7:8 பாருங்கள். "பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மௌனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்று கூறி அந்த நற்செய்தியை அறிவிக்க இரவோடு இரவாகச் சென்றார்கள்.

அந்தக் குஷ்டரோகிகள் கூறிய நற்செய்தி கோட்டைக்குள்ளே இருந்தவர்களுக்கு நற்செய்தியாய் மாறிற்றா? ஆம்! மாறிற்று! “ராஜா ராத்திரியிலே எழுந்திருந்து... 'என்று 12 ம் வசனத்தில் வருகிறது.
ஆனால் அந்த நற்செய்தியை நம்பிவிடவில்லை. அதை உறுதிப்படுத்த தனக்கு மீதியாக இருந்த குதிரைகளை அனுப்பிவைக்கிறான். அந்த வீரர்கள் யோர்தான் வரை சென்று கண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

தன்னைத் தாழ்த்தி, இரட்டுடுத்தி கர்த்தர் இரட்சிக்கவேண்டும் என்று (#II_இராஜாக்கள் 6:27) காத்திருந்த இஸ்ரவேலின் ராஜாவுக்குத் தேவன் இரங்கினார். வானசேனையை அனுப்பினார், சீரிய இராணுவத்தைத் துரத்தினார். அவர்கள் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களினாலும் தட்டுமுட்டுகளினாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது என்று #II_இராஜாக்கள். 7:15 கூறுகிறது.
ஒரு இரவுக்குள் அதிசயம் நடைபெற்றது. அடுத்த நாள் காலை அந்த நற்செய்தி பட்டணத்து வாசலிலே பரபரப்பை உருவாக்கிற்று.

அது பசியில் வாடிய பட்டணத்து மக்களுக்கு நற்செய்தி. அவர்கள் பெற்று அனுபவித்தார்கள். அதில் தேவ வார்த்தையை நம்ப மறுத்த ராஜாவின் பிரதானி தன் கண்களால் அதைக் கண்டான், ஆனால் எலிசா தீர்க்கதரிசி சொன்னது போலவே அந்தப் பிரதானி செத்துப்போனான்.

பட்டணத்து ஒலிமுக வாசலிலே ஜனங்கள் அவனை நெருக்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான் என்று #II_இராஜாக்கள் 7 ம் அதிகாரம் நிறைவுபெறுகிறது. நற்செய்தி நம்பப்படவேண்டும்.
பயத்திலிருந்தவர்களுக்கு நற்செய்தி;

இராஜாக்கள். 18:13 முதல் 19 : 37 ம் வசனம் வரை இடம்பெற்றுள்ள மற்றுமொரு சம்பவம் நமக்குக் கற்றுத்தரும் இரண்டாவது உண்மை, பயத்திலிருந்தவர்களுக்கு நற்செய்தி என்பதே. 
அன்று யூதா தேசத்திலே எசேக்கியா என்னும் ராஜா ஆட்சி செய்து வந்தான். அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று சாட்சிபெற்ற ராஜாவின் காலம் அது.

ஆனால் அவனது ஆட்சியின் பதினாலாம் ஆண்டு சனகெரிப் என்னும் அசீரிய தேசத்து ராஜா அவன்மேல் படையெடுத்து யூதா தேசத்திலுள்ள சகல அரணான பட்டணங்களையும் பிடித்தான். 
அப்பொழுது பகுதி கட்டுகிறேன் என்று சரணடைந்த எசேக்கியா, நான் குற்றஞ்செய்தேன் என்று தன் பெலவீனத்தின் உச்சத்தில் தேவாலயப் பொன்னையும் வெள்ளியையும் எடுத்து சனகெரிப்புக்குக் கொடுக்கிறான். அது அவனுக்குச் சாதகமான முடிவைத் தரும், எதிரி தன்னைவிட்டுப் போய்விடுவான் என்று தப்புக்கணக்குப் போட்ட எசேக்கியாவுக்குத் தன் தலைநகரம் எருசேலேமே இக்கட்டில் அகப்பட்டுவிட்டது தெளிவாயிற்று. 

சனகெரிப் தன் தலைநகர் லாகீசிலிருந்து ஒரு பெரிய சேனையை எருசலேமுக்கு அனுப்புகிறான் மூன்று தலைவர்களுடன். அவர்கள் பேசும் - அச்சுறுத்தும் வார்த்தைகள் இராஜாக்கள் 18 : 17-35 வசனங்களில் இடம்பெறுகிறது.

எசேக்கியா ராஜாவின் கடவுள் நம்பிக்கை பரியாசம் பண்ணப்படுகிறது. தேவனாகிய கர்த்தர் கனவீனப்படுத்தப்படுகிறார். பயத்தின் உச்சத்தில் இருந்த எசேக்கியா ராஜா தேவாலயத்தில் சென்று ஜெபிப்பதையும், ஏசாயா தீர்க்கனை ஜெபிக்கச் சொல்லுவதையும் 19 ம் அதிகாரத்தின் முதல் 4 வசனங்களில் பார்க்கிறோம்.

ஆனால் அதைத் தொடர்ந்து, அவனுக்குத் தேவனிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட பதில் #II_இராஜாக்கள் 19:6-34 வசனங்களில் திட்டவட்டமாக விவரிக்கப்படுகிறது.

அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நற்செய்தி. அவர்கள் தேவனுடைய வார்த்தையை நம்பினார்கள், தேவனை நம்பினார்கள். அவர்களுக்கு இடம்பெற்ற நற்செய்தியை 35 ம் வசனத்தில் பார்க்கிறோம்.
அன்று ராத்திரியிலே கர்த்தருடைய தூதன் கர்த்தருக்கு விரோதமாகப் பேசின ராஜாவின் பாளையத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்;

அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் என்பதுவே அந்த நற்செய்தி.

பயத்தின் உச்சத்திலே இருக்கிறாயா? உன்னை பயப்படுத்துகிற சத்துரு இல்லாதே போவான். 
பாவத்தின் பிடியில் தவிப்பவர்களுக்கு நற்செய்தி:- 

யோவான் 4 ம் அதிகாரத்தில் அந்த நற்செய்தியின் ஒரு பகுதியைப் பார்க்கிறோம். இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று #லூக்கா 2 : 10 ல் கூறப்பட்ட அந்த இயேசுவே பாவ மன்னிப்பு தருவதற்குப் பரலோகம் விட்டு பூலோகம் வந்து நம் பாவத்துக்காகப் பலியானவர்.

ஜீவத் தண்ணீரைத் தருபவர். உன்னோடு பேசுகிற நானே அந்த மேசியா என்று அன்று சமாரியா ஸ்திரீயினிடத்தில் சொல்லி தன்னை வெளிப்படுத்தினாரே (#யோவான் 4:26).

என்னை விசுவாசிக்கிறவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் , மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட் பட்டிருக்கிறான் என்று இயேசு கூறுவதை #யோவான் 5 : 24 ல் வாசிக்கிறோம். 

பாவத்தின் அகோரத்தினால் கட்டில் கிடையாக்கப்பட்ட திமிர்வாதக்காரனுக்கு, மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது (#மாற்கு 2 : 5) என்று கூறியது நற்செய்தியல்லவா! அவன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தது உண்மையல்லவா!

பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்த ஸ்திரீ (#லூக்கா 8: 46-48) சுகமாக்கப்பட்டது உண்மையல்லவா!

18 வருஷம் சாத்தான் கட்டி வைத்திருந்த ஆபிரகாமின் குமாரத்தியைக் கட்டவிழ்த்துவிட்ட வல்லமை நற்செய்தி அல்லவா! (லூக்கா 13:16). 

பாவத்தில் கையும் களவுமாகப் பிடித்தோம் என்று கொண்டுவந்த பெண்ணுக்கு மன்னிப்பு அளித்த (யோவான் 8:11) மாபெரும் கிருபை நற்செய்தியல்லவா!

பிரியமானவர்களே, இன்று நம் நிலை என்ன? நம் தேவை என்ன? பசியில் வாடுபவர்களுக்கு நற்செய்தி. பயத்தில் வாழ்பவர்களுக்கு நற்செய்தி இன்னும் பாவத்தில் பிடியில் தவிப்பவர்களுக்கு நற்செய்தி. இயேசுவே அந்த நற்செய்தி.

இயேசுவே அந்த நற்சுவிசேஷம், ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம் மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் , பரலோகம் தந்த ஒரே விசேஷம்!

இந்த இயேசுவை நீ அறிந்துகொண்டால் விடுதலை, அவரை அறிவித்தால் அறுவடை! ஆமென்!!!
எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; (தீமோத்தேயு 2:6)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!