சிவபெருமான் நந்தி தேவருக்கு அளித்த அதிகாரங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்...
நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.
எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் சிறந்து விளங்கும். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.