சினிமாவில் இருந்து விலகும் நடிகர் நாசர்
இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார்.
அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர். நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகிக்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நாசர், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
இந்நிலையில் நாசர் பல வெப் சீரிஸ்களிலும், சில படங்களில் பிசியாக நடித்து வருவதாகவும் இது போன்ற வீண் வதந்திகளை ஏன் பரப்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க கூட அவருக்கு நேரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக நடிகர் சங்க கட்டிடப் பணியை விரைவில் கட்டிமுடிப்பதாக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி முதல்வரின் கரங்களால் திறந்து வைக்க முழு வீச்சில் அவர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.