20ம் திகதி இன்னொரு குழப்பநிலை உருவாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு...?

Nila
2 years ago
20ம் திகதி இன்னொரு குழப்பநிலை உருவாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு...?

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்களும், நாட்டில் குழப்பமான சூழ்நிலைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலும், ராஜபக்ஷவினர் தங்களின் பலத்தை, தக்கவைத்துக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவைப் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது.

நாட்டை விட்டு வெளியேறி, 15மணித்தியாலங்களுக்குப் பின்னர், கோட்டாபாய ராஜபக்ஷ, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் வர்த்தமானியை வெளியிட்டதும், ரணில் விக்கிரமசிங்கவை, அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்வதற்கு பொதுஜன பெரமுனவினரை தயார்படுத்தி வருவதும், இந்த சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.

மே-09 போராட்டங்களை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆக்கப்பட்டதன் பின்னணியில், ராஜபக்ஷவினரின் தனிப்பட்ட நலன்களே இருந்தன.

நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதாக கூறிக் கொண்டு பதவிக்கு வந்த ரணில், ராஜபக்ஷவினரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும், சிக்கல்களில் இருந்து மீட்பதற்கும், போராட்டங்களைப் பலவீனப்படுத்துவதற்குமே முன்னுரிமை அளித்திருந்தார்.

மஹிந்தவும், ரணிலும் முன்னர் அரசியல் போட்டியாளர்களாக இருநதாலும், பால்ய சிநேகிதர்கள்.

இவ்வாறான நிலையில் தான், அரசியல் ரீதியாக அநாதரவாக்கப்பட்டிருந்த ஐ.தே.க.வின் தலைவரான ரணிலை, ராஜபக்ஷவினர் தந்திரமாக தங்களின் வலைக்குள் கொண்டு வந்தனர்.

தங்களின் தரப்பில் உள்ள ஒருவரை முன்னிறுத்துவதை விட, ரணிலை முன்னிறுத்தி, தங்களைப் பலப்படுத்திக் கொள்ள அவர்கள் திட்டமிட்டனர்.

அவ்வாறு தான் அவர் பிரதமர் ஆக்கப்பட்டார். இப்போது பதில் ஜனாதிபதியாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், இலங்கைத் தீவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி இப்போது தீவிரமாக எழுந்திருக்கிறது.

ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவினால், அதிகபட்சம் ஒரு மாதம் தான் பதில் ஜனாதிபதியாக இருக்க முடியும்.

அதற்குள் பாராளுமன்றத்தினால், எஞ்சிய பதவிக்காலத்துக்கான புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை வரும் 20ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, அதுபற்றி சபாநாயகராலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் போது, இன்னொரு குழப்பநிலை உருவாகும் என்றே தெரிகிறது.

ஒருவர் மட்டும், போட்டியிட்டால், எந்த பிரச்சினையுமின்றி அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.

இலங்கையின் வரலாற்றில், இடைக்கால ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நிலை பாராளுமன்றத்துக்கு ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை.

1993 மே 1ஆம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பலியான பின்னர், அப்போது பிரதராக இருந்த டி.பி.விஜேதுங்க பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

அவரை பாராளுமன்றம் தொடர்ந்து பதவியில் இருக்க அங்கீகாரம் அளித்ததால், போட்டி இருக்கவில்லை.

இப்போது, நிலைமை அப்படியில்லை. சஜித் பிரேமதாசவை எப்படியாவது ஜனாதிபதி ஆக்கி விடுவது என்று ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருக்கிறது.

சுயாதீன அணியாக செயற்படும், பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்களை உள்ளடக்கிய, அதன் முன்னாள் பங்காளிக் கட்சிகள், டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியில் நிறுத்த முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், ராஜபக்ஷவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மொட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணிலை ஜனாதிபதியாக்குவதன் மூலம், தங்களின் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம், ஜனாதிபதி பதவிக்கு மும்முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில வேளைகளில் அதனை விட அதிகமானோர் போட்டியிட்டாலும் ஆச்சரியமில்லை.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் 54உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும், சுயாதீன அணியில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்தக் கூடிய பொதுஜன  பெரமுன மற்றும் ஐ.தே.க.வை சேர்த்து, 101உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 10 பேரும், தேசிய மக்கள் சக்தியில் 3 பேரும், ஈ.பி.டி.பி., மற்றும் தமிழ் காங்கிரஸ் சார்பில் தலா 2 பேரும், ஏனைய கட்சிகளின் சார்பில் தலா ஒவ்வொருவர் வீதம், 8 பேரும் உள்ளனர்.

பாராளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் செல்லுபடியான வாக்குகளில் பாதியை பெறுபவர் தான் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் 54 உறுப்பினர்களுடன், சஜித் பிரேமதாச தனக்கு மேலதிகமாக எத்தனை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளப் போகிறார் என்பதில் தான் அவரது வெற்றி தங்கியிருக்கப் போகிறது.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கு முக்கியமானதொரு இலக்காக இருக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவை கூட்டமைப்பு ஆதரிக்காது, டலஸ் அழகப்பெருமவையும் ஆதரிக்க வாய்ப்புகள் குறைவு. 

இந்த நிலையில் கூட்டமைப்பு சஜித்துடன் பேரம் பேசும் வாய்ப்புகள் உள்ளன.

அதேவேளை, டலஸ் அழகப்பெருமவினால் 50 வரையான வாக்குகளை உறுதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. 

குறிப்பாக, சுயாதீன அணியில் உள்ள 45 உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன அவருக்கு ஆதரவளிக்கலாம்.

தற்போது ராஜபக்ஷவினர் மீது அதிருப்தியிலுள்ள இன்னமும், மொட்டு அணியில் இருக்கின்ற சிலரும் அவருக்கு ஆதரவளிக்க கூடும்.

இவ்வாறான நிலையில் தான், ரணிலை முன்னிறுத்த ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளனர்.

ரணிலுக்கு மொட்டு அணியினர் 100 பேரின் ஆதரவு கிடைத்தால், ரணில் இலகுவாக ஜனாதிபதியாகி விடும் வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால், சஜித்தும், டலஸும் வாக்குகளைப் பிரித்தால், ரணில் பக்கம் வெற்றிக் காற்று வீசும்.

அதேவேளை, ரணிலுக்கு மூன்று சவால்கள் உள்ளன.

அவரை ராஜபக்ஷவினர் நம்புகின்ற அளவுக்கு, மொட்டில் உள்ள உறுப்பினர்கள் நம்புகின்றனரா- நம்புவார்களா என்பது முதல் கேள்வி. 

இவ்வாறான நிலையில் அவர்களை ரணிலை கவிழ்த்து விடக் கூடும். அதற்காக அவர்கள் வேறெவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்றில்லை. 

தங்களின் வாக்குகளை செல்லுபடியற்றதாக்கலாம் அல்லது, வாக்களிக்காமல் இருந்து விடலாம்.

இரண்டாவதாக, டலஸ் அழகப்பெரும மொட்டு அணியின் வாக்குகளை அதிகளவில் பிரித்தால், ரணிலின் நிலை பரிதாபமாகி விடும்.

டலஸ் அழகப்பெருமவை மஹிந்தவுக்குப் பின்னர் பிரதமர் ஆக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது, அதனை ராஜபக்ஷவினர் தான் தடுத்து நிறுத்தினர்.

டலஸைஅவர்கள் இப்போது துரோகியாக பார்க்கிறார்கள். எனினும், டலஸ் மொட்டு அணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பதால், அவர் வாக்குகளைப் பிரிக்கும் வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.

ரணிலுக்கு உள்ள மூன்றாவது சிக்கல், மொட்டு அணியில் தற்போது உள்ள 100 பேரும், வாக்கெடுப்பு நேரத்தில் சபைக்கு வருவார்களா என்பது தான்.

பாராளுமன்றத்துக்கு அவர்கள் வரக்கூடிய நிலை இல்லா விட்டால், அச்சம் காரணமாக பதுங்கியிருந்தால் அல்லது போராட்டக்காரர்களினால் தடுக்கப்பட்டால், ரணிலுக்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் போகும்.

இப்போதைய சூழலில், ராஜபக்ஷ குடும்பத்தில் மஹிந்த, சமல், நாமல், ஷசீந்திர, நிபுண ரணவக்க என ஐந்து வாக்குகள் இருக்கின்றன. அவர்களால் 20ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வர முடியுமா என்பது சந்தேகமே.

இவ்வாறான நிலையில், ரணில் தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படலாம். 

அவர் தோற்கடிக்கப்பட்டால் அது ரணிலின் தோல்வியாகத் தான் இருக்குமே தவிர - மொட்டின் தோல்வியாக – ராஜபக்ஷவினரின் தோல்வியாக அடையாளப்படுத்தப்பட்டாது.

அதேவேளை, பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து தங்களுக்கு மாற்றான ஒரு தலைமைத்துவம் மேல் எழுவதை ரணில் மூலம் தடுக்க முனைகிறார்கள்.

ஆக, வரும் 20ஆம் திகதி நடக்கப் போகும் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு, தனியே அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கானதாக மட்டும் இருக்காது.  ராஜபக்ஷவினரின் இருப்பை காப்பாற்றுவதற்கான இறுதி முயற்சியாகவும் இருக்கப் போகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!