திருநீற்றின் மகிமை என்ன தெரியுமா

Nila
2 years ago
திருநீற்றின் மகிமை  என்ன தெரியுமா

ஒரு ஏழை அன்றாட வயிற்றுப்பாட்டிற்கே ஒன்றுமிலாது வறுமையில் வாடிக்கொண்டிருந்தான்! ஆனால் அவன் சோம்பேறி அல்ல... எந்த ஜென்ம பிரதிபலனோ, அவன் எங்கு சென்றாலும் வேலை கிடைக்காது. இல்லை அவனை எல்லோரும் வெறுப்பர்!  ஏனென்றால் அவனுக்கு பொய் பேசத் தெரியாது!!

ஒருநாள் தன் வாழ்வினையும், கடவுளையும் நொந்து நடந்துகொண்டிருந்தான்! அவனுக்கருகில் மேனியெங்கும் திருநீற்றை அணிந்தபடி ஒரு சிவனடியார் சென்றார். அவரை பார்த்ததும் நம்ம கதையின் கதாநாயகன்..."ஐயா..சற்று எனக்காக நிற்க முடியுமா" என கேட்டான்!

அவ்வடியவரும்" என்ன வேண்டும் உனக்கு" எனக்கேட்டு வா "என்னிடம் இருப்பதை தருகிறேன்" என்று பக்கத்தில் இருந்த பாறையின் மீது அமர்ந்தார்."ஐயா எனக்கு ஏதும்..,வேண்டாம்! சிறிய...சந்தேகம் தீர்த்து அருள்வீராக" என்று அவரை வணங்கினான்!

"ஐயா தாங்கள் ஏன் இப்படி சாம்பலை பூசிக்கொண்டிருக்கிறீர்கள்..அதுவும் மேனி முழுதும்?" என்றான்!

சிவனடியாரும்.."குழந்தையே..இது மனித உடல் இறுதியின் வெளிப்பாடு! அதன் அடையாளமே இது! நாம் இறந்த பிறகு சாம்பலாய் போய்விடுவோம் என நம் மனம் எப்போதும் நினைக்கவேண்டும்..ஆகவே இந்த உடலால் அடுத்தவர்க்கு தீமை செய்யக்கூடாது என்பதை அறியவும்...இன்னும் உயிருள்ளவரை இதுவே மகாலெட்சுமி அம்சம்...இதையணிந்தால் செல்வம்பெருகும்  என்பதற்காகவும்.. திருநீறு அணிகிறேன்!" என்றார்.

"சுவாமி எங்கள்குல வழக்கத்தில் இதை அணிய மாட்டார்களே ..நானும் வறுமையில் வாடுகிறேன்..என்ன செய்யவேன்" என்று சிவனடியாரிடம் புலம்பி அழுதான் நம் கதாநாயகன்!

சிவனடியாரும் "சரியப்பா..நீ அணியவில்லை என்றாலும் பரவாயில்லை..அணிந்தவர் நெற்றியையாவது பார் உன் வறுமை நீ்ங்கிவிடும்" என சொல்லி எழுந்து நடக்கத்தொடங்கினார்!

நம் கதாநாயகன் சிந்தித்தான்! நாம் பூச முடியாது...அப்படியெனில் நம் தெரு முனையில் திருநீறணிந்து அதிகாலை மண்ணெடுக்கச் செல்லும் குயவரின் நெற்றியை தரிசித்திட வேண்டியதுதான் என முடிவு செய்து வழக்கம்போலவே மனைவியிடம் நடந்ததைக் கூறி உறங்கினான்! அதிகாலை எழ வேண்டும் என்ற முனைப்பில்!

அதிகாலை எழுந்து தெருமுனையில் குயவரின் நெற்றித்திருநீறு பூச்சை காண காத்திருந்தான்.

குயவரும் அன்று சற்று இவனுக்கு முன்பாகவே கிளம்பிப் போய்விட்டார் என்பதை அறியாதவனாக! காலம் கடந்தும் அவரை காணாது...சரி "நாம்தான் தாமதமாக எழுந்துவிட்டோமோ? சரி..நாம் மண்ணெடுக்கும் இடத்திற்கே போய் தரிசனம் செய்யலாம்" என எண்ணியவாறு வயலை நோக்கி நடந்தான்!
கதையில் அதற்கு முன் நாம் மண்ணெடுக்கும் இடம் செல்வோம்!

குயவர் தோண்டிக் கொண்டிருக்கும் போது எதிர் பாராதவிதமாக புதையல் பானை அவருக்கு சிக்கியது! அவர் அந்த தங்கப்பானை புதையலைக்கண்டு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக.."இதை எப்படியாவது வெளியில் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டுமே...ஆனால் பானை இருவர் சேர்ந்தால்தான் தூக்க முடியுமே.." என்று குழிக்குள்ளிருந்து யார் வருகிறார்கள் என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்!

 நம் கதாநாயகன் அவ்விடம் வந்து சேர்ந்தான்...அவர் எட்டிப்பார்க்கவும் நமது கதாநாயகனும் எதார்த்தமாக அவர் நெற்றியைப்பார்த்து "பார்த்துட்டேன்" என ஆவலாய் கூற....

குயவர்..."ஒருவேளை இவன் புதையலைப் பார்த்துவிட்டானோ"? என்று பயந்து...
"நிஜமாகவே நீ பார்த்தாயா"? எனக்கேட்க...
"ஆமாம் நிறைவாகக் கண்டுவிட்டேன்" எனக்கூற....
 "அப்படியென்றால் குழிக்குள் இறங்கி இந்தப் பானையை ஒரு கைப்பிடி..ஆளுக்குபாதி எடுத்துக்கொள்வோம்" எனக்கூற...நம்ம கதாநாயகனுக்கு உண்மை விளங்கியது!

அப்போது சிந்தித்தானாம் அவன்! "நெற்றியைப் பார்த்ததற்கே பாதி கிடைத்ததே..இன்னும் நாம் பூசினால் என்னவெல்லாம் கிடைக்குமோ" என்று ஜாதி வேற்றுமையை தூரத் தள்ளி வைத்து உடல் முழுதும் திருநீற்றை பூசினானாம்!