கொத்து ரொட்டியின் விலையை குறைக்கத் தீர்மானம்
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு காரணமாக கொத்து ரொட்டி ஒன்றின் விலையை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை முதல் கொத்து ரொட்டி ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மாவுடன் தொடர்புடைய ஏனைய பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது 500 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் கொட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையை 85 ரூபாவால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 375 ரூபாவாகவே இருந்தது. புதிய விலை குறைப்பின் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாகும்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் மாவின் விலை குறைப்பு குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியாது என தோட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.