பி.எச்.அப்துல் ஹமீத் வழிப்போக்கன் அல்ல! வானொலித் துறையின் வழிகாட்டி!
‘பல கலைத்துறைகளில் அப்துல் ஹமீத் ஒரு சாதனையாளர்;
வானொலிக் கலையிலோ ஒரு சகாப்தம்!
அவர் தொடாத அம்சம் இல்லை.
தொட்டுத் துலங்காத அம்சமும் இல்லை’.
-பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன்
இலங்கை வானொலியின் புகழை உலகெங்கும் எடுத்துச்சென்று ஒலிபரப்புக்கலையில் ஒப்புயர்வற்றுத் திகழும் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா பிரிட்டன் தலைநகர் லண்டனில் Winston Churchill Theatre கலையரங்கில் 08.10.2022 சனிக்கிழமை
மாலை நடைபெற்றது.
இந்த நூலின் அறிமுக விழாவை எஸ்.கே.ராஜென் ‘உலகத்தமிழ்க் கலையகம்’, ரி.சிவகுருநாதன் ‘Concern Sri Lanka Foundation’ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை வானொலி வரலாற்று நாயகனான ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் அரை நூற்றாண்டு கடந்த தனது ஒலிபரப்புத் துறை சார்ந்த வரலாற்றை முதன் முறையாக எழுத்தில் பதிவு செய்துள்ள நூல் ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’.
உலகில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு ஒக்ரோபர் 18ம் திகதி கொண்டாடப்படும் சூழலில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலங்கை ஒலிபரப்பு வரலாறு பேசப்படுகிறது, வாசிக்கப்படுகிறது, அதற்கு இந்த நூல் வழிவகுத்திருக்கிறது என்பது பெருமைக்குரியதே.
கொழும்பு வானொலி நிலையம், தொடர்ந்து இலங்கை வானொலி இன்று இலங்கை ஓலிபரப்புக்கூட்டுத்தாபனம். ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்றிருந்த காலம். அது அற்புதமான காலம். அன்றைய கால கட்ட வானொலியாளர்கள் அதனைப் பொற்காலம் என்று கூறி மகிழ்கிறார்கள். ஆம், அது பொற்காலம் தான். வானொலி ஒலிபரப்பு மகிமைபெற்றிருந்த காலம்.
இன்று ஆயிரக்கணக்கான தமிழ் வானொலி நிலையங்கள் உள்ளன. அவற்றின் ஒலிபரப்பு முறைகள் பெரிதும் மாற்றமடைந்து விட்டன.
மாற்றங்களும், நாகரீகங்களும் தமிழுக்கு மட்டும் தான் என்ற போக்கில் ரயில் ஓடும் வேகத்தில் செய்திகள் வாசிப்பதும், கரடுமுரடான இசையைப் பின்னணியில் ஒலிக்கவிடுவதும், இலக்கணப்பிழைகள், கருத்து வழுக்கள் என யாவற்றோடும் ஒலிபரப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது.
உலகில் வானொலி ஒலிபரப்பின் ஆரம்பம், இலங்கையில் வானொலி ஒலிபரப்பின் தொடக்கம் என்பவை இந்நூலில் சிறப்பாகப் பதிவாகியிருக்கிறது.
இலங்கையில் ஆரம்பகால ஒலிபரப்பாளர்கள் ஒலிபரப்புத் துறைக்கு வழங்கிய பங்களிப்பு, அவர்களின் வகிபாகம் என்பவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.
அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் எழுதியுள்ள ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் சாதாரண வாசிப்புக்கு உரியது என்று கூறிவிடமுடியாது. ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்கள் இந்த நூலில் நிறைந்திருக்கின்றன.
இன்றைய இளந்தலைமுறை ஒலிபரப்பாளர்கள் தம்மை ஒரு நேர்த்தியான ஒலிபரப்பாளராக நிலை நிறுத்த இந்த நூல் பெரிதும் துணை புரியும்.
இலங்கை ஒலிபரப்பு வரலாற்றை அறிந்துகொள்ள அருமையான நூல்.
அமெரிக்காவிலும், கனடாவிலும் வெளியிட்டு வைக்கப்பட்ட ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் லண்டன் மாநகரில் அறிமுகவிழா கண்டது.
செல்வி அனினியா, நன்னியா ராஜேந்திரகுமார் சகோதரிகள் தமிழ் வாழ்த்துப் பாடியதை அடுத்து, நிருத்தோதயா நாட்டியாலயா இயக்குநர் ராஹினி சிவசோதிலிங்கம் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் ஹஸ்னா சிவசோதிலிங்கம், பவிக்ஷன் சிவசோதிலிங்கம் ஆகியோர் நடன விருந்தளித்தனர்.
தொடர்ந்து காணொளிக்காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமலஹாசன் போன்ற தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுடன் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ஈடுபாடு, அவர்கள் அப்துல் ஹமீத் பற்றி கூறிய விடயங்கள் அவையோரின் கவனத்தைப் பெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்ட பேச்சாளர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். திருமதி கமலினி சிவகுருநாதன், திரு.ரி. சிவகுருநாதன் ஆகியோர் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தனர்.
பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு ‘பாம் பீச்’ உரிமையாளர் றூபன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்க, ‘பியூற்றி கொம்லெக்ஸ்’ ஜெயதீசன் அவர்கள் மலர் மாலை அணிவித்தார்.
உலகெங்கும் தமிழோசை பரப்பிய தாய், ஆனந்தி சூரியப்பிரகாசம் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
புத்தகம் அருமையாக உள்ளது என்று தொடங்கியவர் அருகில் அமர்ந்திருந்த அப்துல் ஹமீத் மீது அன்பு கொண்டு பேசி ஒரு செவ்வி காண ஆரம்பித்தார். அந்தளவுக்கு அப்துல் ஹமீத் அவர்களின் நூல் பி.பி.சி தமிழோசை புகழ் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களைக் கவர்ந்து கொண்டது.
இலங்கைத் தமிழ் ஒலிபரப்பில் பி.எச்.அப்துல் ஹமீத் என,
ஈழத்தின் மூத்த பத்திரிகையாளர் ‘ஈழநாடு’ மாலி அவர்கள் பேசினார். இலங்கை வானொலி ஒலிபரப்பின் ஆரம்பத்தையும், உலக ஒலிபரப்பின் ஆரம்பத்தையும் நினைவுபடுத்தியவர், கொழும்பு வானொலி, இலங்கை வானொலி ஆரம்பம் பற்றியும், இலங்கை வானொலியின் முதல் அறிவிப்பாளர் சோ.நடராஜா, இலங்கை வானொலி முதல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சோ.சிவபாதசுந்தரம் எனப் பல முன்னோடிகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.
வர்த்தக சேவையின் ஆரம்பம் பற்றிக் குறிப்பிட்ட மாலி அவர்கள் இலங்கை வானொலியின் ஒலிபரப்புத் தரத்துக்கு காரணிகளாய் அமைந்திருந்தவைகள் பற்றியும், எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் பணியையும் அவர் மூலம் இலங்கை வானொலி அடைந்த புகழையும் விரித்துரைத்தார்.
இன்று உலகத்தமிழர்களை ஆளும் குரல் அப்துல் ஹமீத் எனப் புகழாரம் சூட்டி மகிழ்கிழ்ந்தார். மாலி அவர்கள் இலங்கை வானொலியின் அன்றைய ஒலிபரப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோருடன் நெருக்கம் கொண்டிருந்தவர். ஒலிபரப்புத் துறை சார்ந்து அவ்வப்பொழுது எழுதியும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வானொலிப் பணியில் ஒன்றானோம் என, 1967ஆம் ஆண்டில் இலங்கை வானொலி தமிழ்ச்சேவைக்குத் தெரிவான ஐந்து அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜோக்கிம் இருதயானந்தன் தனது உரையில் அன்று, ஜோக்கிம் ஃபெர்னாண்டோ,ராஜேஸ்வரி சண்முகம், சி.நடராஜசிவம், பி.எச்.அப்துல் ஹமீத் ஆகியோர் வரிசையில் தானும் ஒருவனாக இடம்பிடித்ததை நினைவுபடுத்தினார். பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஜோக்கிம் இருதயானந்தன் தமக்கு சானா சண்முகநாதன் பயிற்சி வழங்கியதையும், ஒலிபரப்பில் அறிவிப்பாளர்கள் கவனிக்க வேண்டியவை என்ன என்பவை பற்றியும் எடுத்துக்கூறியவர் ஹமீத் அவர்கள் போல் ஒலிபரப்புத் துறையில் தானும் இயங்கிக் கொண்டிருப்பதையும் கூறினார்.
“என் அப்பாவை நேசித்த அப்துல் ஹமீத்”என எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் புதல்வி யசோதா மயில்வாகனன் பேசினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வாழ்ந்து வரும் அவரின் அழகு தமிழ் இனிமையாக இருந்தது.
“அப்பா றேடியோ சிலோன் எஸ்.பி.மயில்வாகனன், அம்மா செந்தில்மணி. அம்மாவின் குரலை வானொலியில் கேட்டு அவரைக் காதலித்துக் கட்டாயப்படுத்தித் கலியாணம் செய்துகொண்டார்” எனக் கூறி சபையோரின் ஆரவாரமான கரவொலியைப் பெற்றார் யசோதா மயில்வாகனன்.
“றேடியோ சிலோனைச்சேர்ந்த பல இளைய அறிவிப்பாளர்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்துல் ஹமீத், நடராஜசிவம் ஆகியோர் வீட்டுக்கு வந்தமை நினைவில் இருக்கிறது. அப்பா றேடியோ சிலோனில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்த காலம். அப்பொழுது இளையவர்களான இவர்கள் அப்பாவைத் தேடிவந்தது, குறிப்பாக அப்துல் ஹமீத் அப்பா அருகிருந்து பேசிக்கொண்டமை இன்றும் நினைவில் இருக்கிறது” என்றார். “அப்பாவை மீண்டும் றேடியோ சிலோன் பணிக்கமர்த்தியது. அப்பா றேடியோ சிலோனில் இருந்து இடை நிறுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் றேடியோ சிலோனில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். அதனை அறிந்த அப்பா அந்த அறிவிப்பாளருக்கு மீண்டும் றேடியோ சிலோனில் வேலை கிடைக்க உதவினார்” என்பதையும் சுட்டிக்காட்டிய யசோதா மயில்வாகனன்
அப்பாவின் பெயரால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி எனக் கூறினார்.
காற்றின் கலையை எழுத்தில் வடித்த பி.எச்.அப்துல் ஹமீத் என விழித்த நூலகவியலாளர் என்.செல்வராஜா, அரைநூற்றாண்டு கால ஒலிபரப்பு வரலாற்றைப்பதிவு செய்திருப்பதை மிக விரிவாக எடுத்துக்கூறியதுடன், இந்நூலை எழுத முழுமையான தகுதி பெற்றவர் பி.எச்.அப்துல் ஹமீத் என்றும் குறிப்பிட்டார்.
அரங்க அளிக்கைகளில் அப்துல் ஹமீத் வகிபாகத்தை பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்கள் பதிவுசெய்ததையும் எடுத்துரைத்தார்.
தாயகக் கலைஞர்கள் எங்கிருந்தாலும் அங்கு வருகை தந்து சிறப்பிப்பவர் கோவிலூர் செல்வராஜன் அவர்கள்.
70கள் 80கள் எங்கள் பொற்காலம் என தமது கவிவரிகளால் வாழ்த்தினார்.
தப்பில்லாத் தமிழ்தனைப் பேசி தனித்துவக்குரலால் தமிழுடன் வாழும் அப்துல் ஹமீதை அரங்கிற்கு வராமல் கோவிலூர் செல்வராஜன் குரல்வாயிலாக வாழ்த்தினார் புலவர் நல்லதம்பி சிவநாதன்.
அப்துல் ஹமீத்தின் தமிழ் உதட்டில் இருந்து உச்சரிக்கப்படுவதில்லை, அதுஉயிரிலிருந்து உச்சரிக்கப்படுவது என்று 2004ம் ஆண்டு அப்துல் ஹமீத் அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியமையும் அவரது கவியில் நினைவுபடுத்தப்பட்டது.
வானொலிக்கலைஞனாய் வாழும் பி.எச்.அப்துல் ஹமீத், எல்லோரும் அழகுறத் தமிழ் பேசவேண்டும் என்பதை செல்லுமிடமெங்கும் கூறிவருகிறார் என்ற எம்.என்.எம்.அனஸ் இன்றைய வானொலி ஒலிபரப்பின் தன்மையைத் தெரிவித்து இலங்கை வானொலி மாணவர் மன்ற நிகழ்ச்சி அனுபவத்தையும் எடுத்துக்கூறினார்.
பி.எச்.அப்துல் ஹமீத் எழுத்தை வாசித்தேன் என்கிறார் பேராசிரியர் மு.நித்தியானந்தன்.
அப்துல் ஹமீத் அவர் வழிப்போக்கன் அல்ல! அப்துல் ஹமீத் வானொலித்துறை வழிகாட்டி! அவர் தமிழர்களின் வாழ்வியலில் அங்கமாகிவிட்டார்.
அப்துல் ஹமீத் வானொலித்துறை வழிகாட்டி என பேராசிரியர் மு.நித்தியானந்தன் முழங்கினார்.
நூலை மிக ஆழமாக வாசித்து, அவருக்கே உரிய வகையில் ஆய்வுரையை வழங்கினார். இலங்கை வானொலி என்பதில் உள்ள ஈடுபாடு, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பதில் இல்லை. இலங்கை வானொலிக்குள் நிகழும் விரும்பத் தகாதனவற்றைச் சுட்டிக்காட்டியவர், அதற்குள் அப்துல் ஹமீத், ஜோச் சந்திரசேகரன் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். கலைப்படைப்புக்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.
தமிழர்களின் வாழ்வில் தடம்பதித்த பெருமகனாகவே அப்துல் ஹமீத் இந்த நூலில் தோற்றம் பெறுகிறார் என பேராசிரியர் மு.நித்தியானந்தன் மிகச் சிறப்பாக நூல் ஆய்வை வழங்கியிருந்தார்.
வானலைகளில் ஒரு வழிப்போக்கன் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்,
வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறி மகிழ்ந்தார். நூலை ஏன் எழுதினார் என்பதையும், நூலுக்காகத் தேடிக்கொண்ட விடயங்களையும், அதற்காக உதவியவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
பிரிட்டன் COSMOS அமைப்பினர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு ஒலி-ஒளி விருது வழங்கி மாண்பேற்றிக்கொண்டனர்.