சுவிசிலிருந்து சண் தவராஜாவின் ஆண் திமிரும் பெண் கொலையும்
(ஆண் திமிரும் பெண் கொலையும் என்கிற கட்டுரை பற்றி சுவிசிலிருந்து சண் தவராஜா அவர்கள் எமது லங்கா4 செய்தி தளத்திற்கு நேரடியாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.)
ஆணவக் கொலைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். சாதியப் பெருமை(?) பேசும் சமூகத்திலும், குடிப் பெருமை, மதப் பெருமையை நிலைநாட்ட விழையும் சமூகத்திலும் பெரும்பாலும் பெண்களைக் கொலை செய்வது ஆணவக் கொலை என வழங்கப்படுகின்றது. குடும்பத்தால், சமூகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி ஒரு பெண் தனது விருப்பத்துக்கு உரிய ஒரு துணையை, தான் சார்ந்த சமூகத்துக்கு அப்பால் தேடிக் கொள்ளும் போது தமது கௌரவம்(?) பாதிக்கப்படுவதாக உணரும் குடும்பம், சமூகம் தனது கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக(?) இவ்வாறான கொலைகளில் ஈடுபடுகின்றது. இத்தகைய கொலைகள் பெரும்பாலும் ஆசியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலுமேயே அதிகம் இடம்பெறுகின்றன. இத்தகைய கொலைகளைப் புரியும் நாடுகளின் வரிசையில் இந்தியாவே முன்னிலை வகிக்கின்றது.
கொலை செய்வது இழிவான செயல். அதில் எவ்வாறு கௌரவம் அடங்க முடியும் என அறிவியல் பூர்வமாக விவாதம் செய்தாலும், படித்தவர்கள் கூட இத்தகைய கொலைகளைப் புரிகின்றார்கள் அல்லது அத்தகைய கொலைகளுக்கு உடந்தையாக இருக்கின்றார்கள் என்பது நடைமுறை யதார்த்தம். தாய்நாட்டுச் சூழலில் தவிர்க்க முடியாத நிலையில் நடைபெறும் இத்தகைய கொலைகள், அதே நபர்கள் மேற்கு நாட்டு ஜனநாயகச் சூழலில் வாழத் தொடங்கிய பின்னரும் தொடர்கின்றன என்பது அதிர்ச்சியான ஒரு செய்தி.
இத்தகைய கொலைகள் உலகம் முழுவதிலும் ஆண்டொன்றுக்கு 5,000 வரை நடைபெற்று வருகின்றன என்கிறது ஐ.நா. சபையின் புள்ளிவிபரம். அதேவேளை, மேற்குலக நாடுகளில் குடும்பப் பிணக்குகளில் கொல்லப்படும் பெண்களையும் இந்த வரையறைக்குள் அடக்க வேண்டும் என்கின்றனர் பெண்ணியவாதிகள்.
மேற்கு நாடுகளில் தமது இணையரால் பெண்கள் கொல்லப்படும் வேளைகளில் தாம் ஆத்திரமூட்டப்பட்டதன் காரணமாக அல்லது பொறாமை காரணமாக கொலைகளைப் புரிந்ததாக கொலையாளிகள் சாட்சியமளிப்பதும், அத்தகைய வேளைகளில் அவை ஒரு வகையில் தூண்டப்பட்ட கொலைகளாகக் கருதி, கொலைகளைப் புரிந்த ஆண்களுக்கு குறைந்தளவான தண்டனை வழங்கப்படுவதாகவும் பெண்ணியவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை இதுபோன்று உலகம் முழுவதிலும் 20,000 வரையான பெண்கள் ஆண்டுதோறும் கொல்லப்படுகின்றார்கள். இத்தகைய பெரும்பாலான கொலைகள் தற்கொலைகளாகச் சோடிக்கப்படுகின்றன. சிலவேளைகளில் கொலையான பெண்களின் உடல்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் காணாமற் போனவர்கள் என்ற வரையறைக்குள் அடக்கப்பட்டு விடுகின்றனர்.
இவ்வாறு பிரித்தானியாவில் மாத்திரம் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் தனது இணையரால் அல்லது முன்னாள் துணைவரால் கொல்லப்படுகின்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிபரங்களின் படி 2020ஆம் ஆண்டில் ஆகக் கூடுதலாக போலந்தில் 400 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் யேர்மனியில் 117 பேரும் இத்தாலியில் 102 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஹங்கேரியில் 99 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குடும்பப் பிணக்குகளில் பெண்கள் மாத்திரம் கொலையாவதில்லை. சில வேளைகளில் ஆண்களையும் பெண்கள் கொலை செய்கின்றனர். அவ்வாறு கொலைகளைப் புரியும் பெண்களுக்கு அதிக தண்டனை வழங்கும் நீதிமன்றங்கள் அதேபோன்று கொலைகளைப் புரியும் ஆண்களுக்கு குறைந்தளவான தண்டனைகளையே வழங்குகின்றன என்பது இரகசியம் அல்ல.
ஆத்திரமூட்டப்பட்ட நிலையிலேயே ஆண்கள் கொலைகளைப் புரிந்தார்கள் எனப் பரிந்து பேசும் நீதிமன்றங்கள், ஆண்களின் சித்திரவதைகளை, கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே பெண்கள் கொலை செய்ய முனைகிறார்கள் என்ற விடயத்தைத் தமது தீர்ப்புகளில் கவனத்தில் கொள்வதில்லை.
இன்றைய ஆண் மைய உலகில் சட்டங்களை உருவாக்குபவர்களாக ஆண்களே உள்ளனர். சட்டத்தை நிறைவேற்றும் இடத்திலும் அவர்களே அதிகமாகவும் உள்ளனர். இதனால், தங்கள் தேவைக்கேற்ப சட்டங்களைப் பிரயோகிக்கவும், சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து தப்பித்துக் கொள்ளவும் அவர்களால் முடிகின்றது.
கலாசாரம், பண்பாடு, குடும்ப கௌரவம், மரபு என்ற போர்வைகளில் ஒளிந்து கொண்டு, அல்லது தங்களது சுயத்தை ஒளித்துக் கொண்டு, இவை யாவற்றையும் கட்டிக் காத்துப் பேண வேண்டிய கடப்பாடுகளை பெண்களின் தோள்களில் ஏற்றிவைத்துவிட்டு பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ஆண் சமூகம், பெண்களுக்குக் கொலையையே தீர்ப்பாக எழுதுகிறது. தந்தை, கணவன், சகோதரன் மேலும் கலாசாரக் காவலர்கள் என அனைவரிடமும் இருந்து தமது சுதந்திர வாழ்வையும், இன்னுயிர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துடனேயே தமது வாழ்க்கை முழுவதையும் கழிக்க வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.
21ஆம் நூற்றாண்டிலும் நீடிக்கும் ஆண்களின் இத்தகைய மனோபாவத்துக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. ஆண்களின் உடமைகளாக பெண்களைக் கருதும், அவர்களின் சுயாதிபத்தியத்தை மறுதலிக்கும் இந்தக் கொள்கை காலங்காலமாக சட்டங்களாலும், மரபுகளாலும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. ஆதிகாலம் தொட்டு நீடித்துவரும் பெண்கள் தொடர்பான பாரபட்சமான கொள்கைகளே நவீன சட்டங்களிலும் உள்வாங்கப்பட்டு உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.பழம்பெரும் நாகரீகங்களான அசிரிய, ரோம, சுமேரிய நாகரீகங்களில் பெண்களை விடவும் ஆண்கள் உயர்வானவர்கள் என்ற கருத்தும், திருமணத்துக்குப் புறம்பான உறவுகளை நாடும் பெண்களுக்கு அதீத தண்டனை வழங்குவதும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமாக இருந்து வந்துள்ளது. "இறைவனின் ஆசீர்வாதத்துடன், மதகுருமாரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களால்" பெண்கள் இவ்வாறு கொடூரமாக நடத்தப்பட்டார்கள். அதன் நீட்சியே இன்றுவரை உள்ளது.
பண்டைய ரோம சட்டத்தில், பெண்கள் விடயத்தில் திருமணத்துக்கு அப்பாலான உறவு பெருங் குற்றமாகக் கருதப்பட்டது. அத்தகைய குற்றத்துக்கு மரணமே தண்டனை. அவ்வாறு தவறிழைத்த பெண்ணுக்குத் தண்டனை வழங்க ஒத்துழைப்பு நல்காத குடும்பத்தினரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோமர்களுக்கு முன்னதாகவே இதுபோன்ற சட்டங்கள் உலகில் இருந்துள்ளன. மொசப்பத்தோமியாவை ஆட்சி செய்த பபிலோனிய மன்னரான ஹம்முராபி கி.மு. 1780இல் இது தொடர்பான சட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ஹம்முராபி சட்டம் என அறியப்படும் இந்தச் சட்டத்தின் பிரகாரம் திருமணத்துக்கு அப்பாலான உறவைப் பேணும் பெண்ணைக் கயிற்றால் கட்டி, ஆற்றில் எறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட்டது. எனினும், இதுபோன்ற குற்றத்தைப் புரியும் ஆண்களுக்கு இதே வகையான தண்டனை வழங்கப்படவில்லை.
கி.மு. 200ஆம் ஆண்டில் தற்போதைய இந்தியாவில் அமுலில் இருந்த மனு ஸ்மிருதி என்ற சட்டம் தனது கணவனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பெண்ணை நாய்களுக்கு இரையாக்கிக் கொல்லும் அதிகாரத்தை வழங்கி இருந்தது. மனு ஸ்மிருதியைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களின் உடமைகளே. அந்தச் சட்டத்தின் கூறுகள் இன்றுவரை தொடரும் நிலையே உள்ளது.
ஆண்களின் கௌரவத்தைக் காப்பாற்றுவது என்ற போர்வையில் உலகம் முழுவதிலும் கோடானு கோடிப் பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மனித குல வரலாறு முழுவதிலும் வெட்கக் கேடான வகையில் பெண்களின் குருதி சிந்தப்பட்டே வந்துள்ளது. நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாகப் பெருமை பேசும் இன்றைய நாளிலும் இதுபோன்ற கேவலமான குற்றங்கள் - சட்டத்தின் துணையுடன் - தொடர்வது அருவருக்கத்தக்கது.
தாயாக, சகோதரியாக, இணையராக, தோழியாக ஆண்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமையும் பெண்கள் இன்னமும் கூட இரண்டாம் தரப் பிரசைகளாக நடத்தப்படுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொன்றெழிக்கப்படுவதும் ஆண்களின் கௌரவத்தைக் காப்பாற்றவே என்றால், அத்தகைய கௌரவத்தால் என்ன பயன்? பெண்களின் இந்த இழிநிலையை மாற்றப் போராடும் இலட்சோபலட்சம் பெண்களுடன் கரங்கோர்ப்பது பெண்களை தனக்கு இணையான உயிரிகளாகக் கருதும் ஒவ்வொரு ஆணினதும் கடமை, பொறுப்பு அல்லவா?
வீரகேசரியில் வெளிவந்த கட்டுரை எமது லங்கா4 தலத்தில் மீளப்பிரசுரிக்கப்படுகிறது.