அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கண்டிக்கப்படவும் தடுக்கப்படவும் வேண்டியவை

Kanimoli
2 years ago
 அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கண்டிக்கப்படவும் தடுக்கப்படவும் வேண்டியவை

துருக்கி நாட்டின் கலாசாரத் தலைநகர் என வர்ணிக்கப்படும் இஸ்தான்புல்லில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் 6 பேர் மரணமடைந்துள்ளனர். 81 பேர் காயங்களுக்கு இலக்கானதாகவும் அவர்களுள் இருவரின் நிலை கவலைக்கு இடமாக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளின் பின்னர் துருக்கியில் நடைபெற்ற இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் மக்கள் மத்தியில் பயத்தையும். அதிர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது. அடுத்த வருடம் யூன் மாதத்தில் அரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் கடந்த தேர்தல் காலத் தாக்குதல்கள் போன்று மீண்டும் தாக்குதல்கள் இடம் பெறலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. 2015-16 காலப்பகுதியில் துருக்கியின் பல இடங்களிலும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 150 வரையானோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதல்களை ஐ.எஸ். மற்றும் குர்திஸ்தான் மக்கள் கட்சியின் இராணுவப் பிரிவு ஆகியவை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இறுதியாக நடைபெற்ற தாக்குதலையும் குர்திஸ்தான் போராளிகளே மேற்கொண்டதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குண்டை சம்பவ இடத்துக்கு எடுத்து வந்த பெண் உட்பட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரியப் பிரஜையான ஆலம் அல்பஷீர் என்ற பெண்மணி சிரியாவில் இருந்து 4 மாதங்களுக்கு முன்னர் வருகை தந்ததாகவும் குர்திஸ்தான் தேசியவாதிகளிடம் குண்டுத் தாக்குதல் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றிருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

2016 யூலை 15இல் நேட்டோ ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை முறியடித்த தற்போதைய அரசுத் தலைவர் எர்டோகான் தலைமையிலான அரசாங்கம் இறுக்கமான. சமரசமற்ற ஒரு கடுமையான ஆட்சி முறையைப் பின்பற்றி வருகின்றமை தெரிந்ததே. பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கை என்ற போர்வையில் மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவைக்கும் அரசாங்கம் பல்வேறு ஜனநாயக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. தற்போதைய குண்டு வெடிப்பின் பின்னரும் உடனடியாகவே இணைய வசதிகளை முடக்கியும், சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தியும் தனது கடும்போக்கை அரசாங்கம் வெளிப்படுத்திக் கொண்டது.
 
மறுபுறம், தேசியவாதிகள் மத்தியில் இருந்து வெளிநாட்டு அகதிகளுக்கு எதிரான உணர்வுகள் வெளிப்பட்டன. குறிப்பாக சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வந்துள்ள நிலையில், தற்போது அந்த உணர்வு மேலும் அதிகரித்து உள்ளதைப் பார்க்க முடிகின்றது.

தாக்குதல்களால் தம்மைப் பணிய வைக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அரசாங்கம், தாக்குதல்காரர்களுக்கு எதிராகச் சரியான பதிலடி வழங்கப்படும் எனச் சூழுரை செய்துள்ளது. இதன் அர்த்தம் மீண்டும் சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள குர்திஸ் பிரதேசங்களின் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதே. துருக்கியின் வழக்கமான ஒரு நடவடிக்கை இது என்பது உலகறிந்த விடயம்.

நடைபெற்ற தாக்குதல் உலகளாவிய கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. கிரேக்கம் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளும் அமெரிக்காவும் இந்தக் குண்டுத் தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன் இறந்தவர்கள் தொடர்பில் தமது அனுதாபத்தையும் வெளியிட்டுள்ளன. இதில் அமெரிக்கா வழங்கியுள்ள அனுதாபத்தைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு தெரிவித்துள்ளார்.
 
தாக்குதல்தாரி சிரியாவின் கொபானி பிரதேசத்தில் இருந்தே வந்துள்ளார். அந்தப் பிரதேசத்தில் அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் குர்திஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமும் நிதியும் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் அமெரிக்காவின் அனுதாபச் செய்தியை எவ்வாறு நாம் ஏற்றுக் கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்னும் அமெரிக்காவின் இரட்டை வேடம் வெளிப்படுவது இதுவே முதன் முறையும் இல்லை.

மறுபுறம், அமெரிக்காவைக் குற்றம் சாட்டும் தார்மீக உரிமை துருக்கியிடம் உள்ளதா என்கின்ற கேள்வி எழுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் - ஆப்கானிஸ்தான் முதல் சிரியா வரை - அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறது துருக்கி.
 
சிரியாவில் ஆசாத் அரசாங்கத்தின் கண்டனங்களைப் புறந்தள்ளி தனது படைகளை நிலைகொள்ளச் செய்துள்ள துருக்கி ஈராக்கிலும், லிபியாவிலும் கூடத் தனது படைகளை நேரடியாகக் களமிறக்கியும் உள்ளது.

அண்மைக் காலமாக உலக அரங்கில் துருக்கி ஒரு மிக முக்கிய நாடாக மாறியுள்ளது. மூன்றாம் உலகப் போருக்கு வித்திடக் கூடும் என அஞ்சப்படும் உக்ரைன் போரில் போரிடும் இரு தரப்புகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பணியில் துருக்கி ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் துருக்கியின் அந்தஸ்து உயர்ந்துள்ள அதேவேளை அரசுத் தலைவர் எர்டோகானின் செல்வாக்கும் அதிகரித்து உள்ளது. இந்தப் பின்னணியிலும் இஸ்தான்புல்லில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த முறை பொதுத் தேர்தல் சமயத்தில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் ஈற்றில் எர்டோகான் தலைமையிலான அரசாங்கம் உருவாக வழி கோலியதைப் போலவே தற்போதைய தாக்குதலும் உள்நாட்டில் சரிந்து போயுள்ள எர்டோகானின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதல் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே தாக்குதலின் சூத்திரதாரி உள்ளிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

விளைவு எதுவானாலும் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் கண்டிக்கப்படவும் தடுக்கப்படவும் வேண்டியவையே. அதேநேரம், இத்தகைய தாக்குதல்களை நடத்துபவர்கள் தமது கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதும் அவசியம்.

இலட்சியம் மாத்திரம் உன்னதமாக இருந்தால் போதாது, அதனைச் சென்றடையும் வழி வகைகளும் கூட உன்னதமாக அமைதல் அவசியமானது.


சுவிசிலிருந்து சண் தவராஜா

வீரகேசரியில் வெளிவந்த எனது கட்டுரையை மீள் பிரசுரம் செய்வதற்காக lanka 4 ஊடகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!