ஜனநாயகத்தை பற்றி யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - ஐ.நா சபைக்கான இந்திய பிரதிநிதி ஆவேசம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதங்ததிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
இதையொட்டி அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார். பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:- உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன.
நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம். ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது.
நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை



