பிரித்தானியாவில் 365 நாட்கள் ஒடி ஒரு மில்லியன் பவுண்ட் நிதி திரட்டிய நபர்!

பிரித்தானியாவில் நபர் ஒருவர் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலைவு ஓட்டத்தை முடித்துள்ளார்.
கம்பிரியா (Cumbria) வட்டாரத்தைச் சேர்ந்த கேரி மெக்கீ (Gary McKee) அன்றாடம் 42 கிலோமீட்டர் ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு நாளும் வேலை தொடங்குவதற்கு முன் நெடுந்தொலைவு ஓட்டத்தில் ஈடுபட்ட அவர் வெறும் உடற்பயிற்சிக்காக அவ்வாறு செய்யவில்லை.
மெக்கீ, புற்றுநோய் நிவாரண நிதிக்கும், முற்றிய நோயாளிகள் இல்லத்துக்கும் நிதி திரட்டினார்.
365 நாள்கள், 365 நெடுந்தொலைவு ஓட்டங்கள், மொத்தம் 15,300 கிலோமீட்டர் தூரம் அவர் ஓடியுள்ளார்.
காலணிகள் 20 முறைக்கும் மேல் மாற்றப்பட்டன. மெக்கீ இறுதி முறையாக நெடுந்தொலைவு ஓட்டத்தில் ஈடுபட்டபோது மழை பெய்துகொண்டிருந்தது.
அதைப் பொருட்படுத்தாமல் ஓட்டத்தைத் தொடர்ந்த அவருக்கு ஆதரவளிக்கப் பார்வையாளர்கள் பலர் சாலைகளில் திரண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தொலைவு ஓட்டத்தின் இறுதியில் ஒரு மில்லியன் பவுண்ட் நிதி திரட்டும் தமது இலக்கை எட்டிவிட்டதாக அவர் கூறினார்.
நிதி திரட்டுவதற்காகவே ஒவ்வொரு நாளும் நெடுந்தொலைவோட்டத்தில் ஈடுபட்ட மனவுறுதிக்காக மெக்கீக்கு புகழாரம் சூட்டப்பட்டது.



