இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா புதன்கிழமை இரவு நண்பர்களுடன் ஒரு ஹோட்டலில் டின்னர்-க்கு சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் பிரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரும் அவர்களுடன் சில போட்டோக்களை எடுத்துக்கொண்டார். ஆனால் அவர்கள் மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரித்வி ஷாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது நண்பர்கள் மற்றும் ஹோட்டல் மேனேஜரை அழைத்த பிரித்வி அவர்களை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்த இருவரையும் ஹோட்டலை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த ஜோடி, பிரித்வி ஷா அங்கிருந்து புறப்பட்ட பின் அவரது காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
மும்பை சாலையில் காரை மறித்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரித்வி ஷா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.