குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பொதுத்தேர்வு எழுதி ஆச்சரியப்படவைத்த இளம்பெண்

#Student #School Student
Mani
1 year ago
குழந்தை பெற்ற 3 மணி நேரத்தில் பொதுத்தேர்வு எழுதி ஆச்சரியப்படவைத்த இளம்பெண்

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பல இடங்களில் பெண்கள் தங்கள் திருமண கோலத்திலேயே தேர்வு எழுதும் நிகழ்வுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு பெண் பிரசவமான சில மணிநேரத்திலேயே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி, தனது அசாத்திய தன்னம்பிக்கையால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ருக்மிணி குமாரி. பட்டியலினத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணமாகி கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் தனது கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நிறைமாத கர்பிணியான பெண் ருக்மிணி கடந்த செவ்வாய் கிழமை அன்று கணிதத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அன்றைய இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் ருக்மிணிக்கு அறிவியல் பாட பொதுத்தேர்வு இருந்துள்ளது. பிரசவமான உடலுக்கு ஓய்வு தேவை, தேர்வை அடுத்த முறை எழுதிக்கொள்ளலாம் என அனைவரும் ருக்மிணியை அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், ருக்மிணி தன்னால் முடியும் நான் நிச்சயம் தேர்வு எழுதுவேன் என்று கூறி ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு சென்று பொதுத்தேர்வை எழுதியுள்ளார். தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டு நலமுடன் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார்.

ருக்மிணியின் இந்த செயலை அனைவரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இது குறித்து ருக்மிணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் போலநாத் கூறுகையில், "பிரசவமான உடலுக்கு ஓய்வு தரவில்லை என்றால் அது பாதிப்பை ஏற்படுத்தலாம் என ருக்மிணியிடம் அறிவுறுத்தினோம். ஆனால், அவர் விடாபிடியாக தேர்வு எழுதியே தீருவேன் என்று முடிவெடுத்தார். எனவே, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தோம். அவசர தேவைக்கு முன்னெச்சரிக்கையாக செவிலியர்களை துணைக்கு அனுப்பிவைத்தோம்" என்றார்.

படித்தால் தான் நல்ல வேலைக்கு செல்ல முடியும் என்று கூறும் ருக்மிணி, தனது தேர்வை நல்லபடியாக எழுதியுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பவன் குமார் கூறுகையில், பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் குறித்து அரசு தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது. தனது செயல் மூலமாக ருக்மிணி அனைவருக்கும் ஒரு உந்து சக்தியாக மாறியுள்ளார் என பாராட்டினார்.