புலியை சமைத்து சாப்பிட்ட 12 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை சிலர் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஆக்கபள்ளம் கிராமத்தில் விவசாய விளை நிலங்களுக்குள் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்த நிலையில் வன விலங்குகள் விளை நிலங்களில் சேதம் ஏற்படுத்துவதை தவிர்க்க அக்கிராம மக்கள் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு ஆக்கப்பள்ளம் அருகே வனப்பகுதியில் பெண்புலி ஒன்றின் கால்தடத்தை கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள், புலி நடமாட்டத்தை கண்டுபிடிக்க அந்த பகுதிகளில் கேமராக்களை பொருத்தியிருந்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பகுதியில் அமைக்கபட்டிருந்த சட்டவிரோத மின் வேலியை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த புலியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சமைத்து சாப்பிட்டிருக்கின்றனர் .
இதற்கிடையே இறந்த புலியின் மாமிசத்தை பங்கு போடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால், அதில் சிலர் பிரகாசம் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலி மாமிசத்தை சாப்பிட்டதாக சந்தேகிக்கப்படும் சிலரை வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்ற போது, கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டது.
விசாரணையில் புலியின் உடலை வெட்டி சமைத்து சாப்பிட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து 12 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் பாழைடைந்த கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் புலியின் தோலை மீட்கும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் முடிவுசெய்துள்ளனர்.