புதுச்சேரி- சென்னை இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்

#Chennai #Pudhcherry #Tamil Nadu #Tamilnews
Mani
1 year ago
புதுச்சேரி- சென்னை இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து இன்று தொடக்கம்

சென்னை-புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் சேவை இன்று முதல் தொடங்குகிறது. சாலையில் சரக்குகளை கொண்டு செல்வதை விட கப்பல் மூலம் எடுத்துச் செல்வதால் 25% அளவிற்கு பணம் மிச்சமாகும் என்றும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் கனரக வாகனங்கள் சாலை வழியாக செல்லும் போது அதிகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சரக்குகளை கையாளும் திறனும் குறைகிறது. குறிப்பாக மத்திய தமிழ்நாட்டில் இருந்து வரும் உதிரி பாகங்கள் சென்னைக்கு வருவதற்கும் சென்னையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் புதுச்சேரி திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதனை குறைக்கும் வகையில் சென்னை புதுச்சேரி இடையே வாரம் இருமுறை சரக்கு கப்பல் இன்று முதல் இயக்கப்பட உள்ளது. சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி துறைமுகம் 2017 ஆம் ஆண்டில் சரக்குகளை கையாளுவதற்கும் வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சரக்கு கப்பல் இயக்குவதற்கான பணிகள், துறைமுக அமைப்பு, சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவை வடிவமைக்கப்பட்டு வந்தது. முன்னிலையில் 67 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பலை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கும் வாரத்தில் இரண்டு முறை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூலம் சென்னை துறைமுகத்தின் கையாளுதல் திறன் ஒரு மாதத்திற்கு 600 TEU அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சேவைகள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் என கூறப்படுகிறது. சாலை வழியே சரக்குகளை ஏற்றிச் செல்வதை விட கடல் வழியே கொண்டு செல்வதால் 25 சதவீதம் அளவிற்கு பணம் மிச்சமாவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்கு 12 மணி நேரம் பயணம் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.