35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையரின் விடுதலை குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்றம் ஒன்றுக்கான விசாரணையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டமையின் அடிப்படையில் ஏற்கனவே 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018 கொள்கையின் அடிப்படையில் மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவில் நீதியரசர்கள் அபய் எஸ். ஓகா மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் ஒன்றுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இந்த இலங்கையர்;, ஏற்கனவே 35 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.
இதனையடுத்து 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதியன்று முன்கூட்டிய விடுதலையை கோரியிருந்தார்,இருப்பினும், அவரது மனு 2021இல் இரண்டு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.
செய்த குற்றத்தின் தீவிரம் மற்றும் இரண்டாவதாக, இணை குற்றவாளிகளின் விசாரணைகள் முடிவடையாமை நியாயமான விசாரணைக்கு இடையூறாக இருக்கும் என்பனவே அந்த இரண்டு காரணங்களாகும்.
இதேவேளை, முன்கூட்டிய விடுதலைக்குப் பிறகு, தாம் சொந்த நாட்டிற்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசாங்கத்திடம் குறித்த இலங்கையரான மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.