‘அவள் நாட்டின் பெருமை’

#Women #Womens_Day #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
1 year ago
‘அவள் நாட்டின் பெருமை’

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மையல்லவா. குறிப்பாக ஆண்களை எதிர்கொள்வது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக  கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள். பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர் வேலைக்குத் தான் என்ற கூற்றெல்லாம் தற்போது மாறிவிட்டது. அதாவது பெண்கள் இப்பொழுது ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றன.

பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. 

18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே சரிவருவார்கள் என்று முடக்கிவைக்கப்பட்டார்கள். இந்த நிலை மெல்ல மாறி, 1850 களில் தொழிற்சாலை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணியில் கால்பதித்தாலும் அவர்களுக்கான ஊதியத்தில் தொடர்ந்து பாகுபாடு காட்டப்பட்டது. ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த பெண்கள் 1910-ம் ஆண்டு டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினர். இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தங்கள் உரிமைகளுக்காக பெண்கள் அனைவரும் கைகோர்த்து ஒற்றுமையாக நின்றனர். அந்த மாநாட்டில் கலந்து கொண்டர்களின் முக்கியமானவர் ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின். 


பெண்களின் உரிமைக்காக அவர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்துவந்த கிளாரா, பெண்களின் உரிமைகளை பேச உலகம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நாளை பெண்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கருதினார். அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் மகளிர் தினத்தை கொண்டாடி வந்தன. 

அதற்கு பின் உலகை திரும்பிப்பார்க்க வைத்த புரட்சி என்றால், 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இந்த புரட்சியின் தாக்கத்தால் அப்போதைய ரஷ்ய மன்னர் ஜாரின் ஆட்சியே கவிழ்ந்தது என்பது வரலாறு. இதனையடுத்து 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். 


ரஷ்ய பெண் தொழிலாளர்களின் புரட்சியை நினைவுகூறும் வகையில் புரட்சி நடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும்  ஒரு கருப்பொருளை முன்மொழிகிறது. அதன்படி இந்த ஆண்டு ‘அவள் நாட்டின் பெருமை’ என்ற கருப்பொருள் முன்மொழியப்படுகிறது.

பெண்கள் பல சாதனைகள் படைத்து வெற்றி நடைபோட்டாலும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் அதனால் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவால்களும் தொடர்ந்தவண்ணமே இருப்பது வருத்தத்திற்குரியதாகும்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!