தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்
தமிழகத்தில் தற்போது பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் வரும் இன்று (பிப்.10 ) சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம்கள் நடக்கின்றன.
ஒவ்வொரு முகாமிலும், மருத்துவர், செவிலியர், ஆய்வக நுட்பனர், உதவியாளர்கள் இருப்பார்கள். இந்த முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, தேவையான மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதைத் தவிர, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறும் மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.