சிக்கிமில் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்திய ராணுவம் 1,000 சுற்றுலா பயணிகளை மீட்டது.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி சங்கு ஏரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பனியில் சிக்கின.
இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் விரைந்து வந்து உள்ளூர் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 370 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டது. பனியில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.
இந்நிலையில் கிழக்கு சிக்கிம் மலைத்தொடர்களில் பனிப்பொழிவு காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை அங்கிருந்து மீட்கும் பணி தொடர்ந்த நிலையில், இந்திய ராணுவம் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டது.
இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் ஹிம்ரஹத் மீட்பு நடவடிக்கையில், பல பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சரியான நேரத்தில் உதவிய இந்திய ராணுவத்துக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.