அரசற்ற தேசமாகிய தமிழ்மக்கள் தங்களை தாங்களே முதலில் கட்டமைக்க வேண்டும்!
இன்று இலங்கைத்தீவில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஈழத்தமிழ் புலம்பெயர் சமூகமும் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. 1987 இல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கூட ஈழத்தமிழ் மக்களின் ஒப்புதலின்றி வலிந்து இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட ஒன்றாகும்.
ஈழத்தமிழர்கள் சார்பில் இந்தியாவே அதில் கையெழுத்து வைத்தது. குறைந்த பட்ச அதிகாரங்களைக் கொண்ட 13 ஆவது திருத்த சட்டத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்த இந்தியா ஆக்கபூர்வமான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக, இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்த அடக்குமுறை தொடர்ந்தது. இலங்கை மீது தலையீடு செய்வதற்கு சட்டபூர்வமான ஆவணமாக 13 ஐ இந்தியா வைத்திருந்ததே தவிர அதனை நடைமுறைப்படுத்த காத்திரமான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கவும் இல்லை. இலங்கை அரசை சரியான முறையில் வலியுறுத்தவுமில்லை.
இலங்கையின் பூகோள அமைவிடம் இந்தியாவுக்கு அருகிலேயே உள்ளது. அது தவிர்க்க முடியாதது. ஈழத்தமிழர்கள் அந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தியாவைத் எதிர்த்து பேச்சுவார்த்தைகளோ, சமாதான முயற்சிகளோ சாத்தியமில்லாத ஒன்று. இவை தான் இத்தீவின் கடந்தகால வரலாற்று அனுபவம்.
அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாகிய போதிருந்த சர்வதேச - உள்நாட்டு அரசியல் சூழல்கள் வேறானவை. இப்போது முற்றிலும் மாற்றமடைந்திருக்கிறது. இப்போது இங்கு வரும் இந்திய அரசியல் தலைவர்களும், ஏனைய சமூக தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு தீர்வாக 13 ஐயே வலியுறுத்தி வருகின்றனர். அதனை முதலில் அவர்கள் நிறுத்த வேண்டும். இன்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சமஷ்டி தீர்வையே வலியுறுத்தி வருகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் அடிப்படை கோட்பாடுகளான மரபுவழித் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை மேடைக்கு செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
2009 க்கு பின் அதாவது தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு பின்னர் இன்று தமிழ் மக்கள் சர்வதேச மத்தியஸ்தத்துடனான தீர்வையே எதிர்பார்த்துள்ளனர். பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த வேண்டும் என ஈழத்திலிருந்து தமிழ் அரசியல்வாதியான சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். ஆகவே சமஷ்டி அதற்கு அப்பாலான தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
இந்நிலையில் ஈழத்தமிழர் அரசியலில் புலம்பெயர் தலையீடு என்பது காலத்துக்கு காலம் இருந்து வந்திருக்கிறது. போர்க்காலத்திலும் சரி இப்போதும் சரி தாயகத்தை நோக்கி புலம்பெயர் தமிழ் மக்கள் செய்த உதவிகள் தான் இன்றும் இங்குள்ள மக்களில் பலரை வாழ வைத்துக் கொண்டுள்ளது. ஆனாலும் கட்டமைக்கப்பட்டு எந்த உதவிகளையும் செய்வதற்கு சிங்கள பேரினவாத அரசு முட்டுக் கட்டையாகவே உள்ளது. அதற்கு கடந்த வடமாகாண சபைக் காலத்தில் முதலமைச்சர் நிதியம் என்ற ஒன்றை ஏற்படுத்தி வடக்கை துரித கதியில் புலம்பெயர் உதவியோடு முன்னேற்றும் திட்டம் ஒன்று கையெடுக்கப்பட்ட போதும் சிங்கள அரசு அதற்கு அனுமதிக்கவில்லை. அதே போல் இன்று பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்து அதனை சர்வதேச தரத்துடன் பேண இலங்கை அரசு பின்னடித்து வருகின்றது. இதற்கு ஒரே காரணம் தமிழர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி விடுவார்கள் என்கிற பயம் தான். வெளி நாடுகளில் இருந்து அதிகளவான தமிழ் மக்களே இலங்கையின் பிரதானமான விமான நிலையத்தினூடாக பயணம் செய்து வருகின்றனர். வடக்கில் ஒரு விமான நிலையம் நிறுவப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் சிங்கள மக்களிடம் சென்றடையாது என்பதே ஆகும், இதனால் ஏராளமான சிங்கள வணிகங்கள் பாதிக்கப்படும் என்ற ஒற்றைக்காரணமே இவற்றுக்கான முக்கிய காரணமாகும்.
இன்று புலம்பெயர் சமூகம் பாரியளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் உள்ளூர் அதிகாரசபைகள் முதல் - நாடாளுமன்றம் வரை எமது பிரதிநிதிகள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் பொருளாதார ரீதியிலும் பெருமளவு முன்னேறியிருக்கிறார்கள். உலகளவில் வெற்றிகரமான பல நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும் நிதி செலவிம் எடுக்கப்படும் படங்களுக்கு தயாரிப்பாளர்களாகவும் விளங்குகிறார்கள். ஈழத்தை அரசியல், பொருளாதார ரீதியில் உறுதியுடன் முன்னேற்ற வேண்டும் என்கிற சிந்தனையும் அவர்களுக்கு உண்டு. தமிழ் மக்களின் நலனுக்காக அவ்வப்போது இங்கு நடக்கும் பெரும் போராட்டங்களின் பின்னணியில் புலம்பெயர் சமூகம் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால், ஈழத்தமிழர்கள் - புலம்பெயர் சமூகம் இரண்டுமே அரசற்ற தரப்புகள் தான். இந்தியா - இலங்கை போன்ற நாடுகள் அரசுள்ளவை. அவை அந்த அடிப்படையில் அதாவது அரசுகளுக்கு இடையில் உறவுகளை சரியாக பேணும். அரசுள்ள நாடுகளுக்கிடையிலான உறவுகளை போல் அரசற்ற தேசங்கள் உறவுகளை பேண முடியாது. அதற்கு வரையறைகள் உண்டு. அங்கே தான் சிக்கல் உள்ளது. 2009 க்கு முன்னர் அரசற்ற தேசம் ஒன்றாவது இருந்தது. உறுதியான தலைமையும் இருந்தது. இன்று அந்த நிலைமையும் இல்லை. 2009 க்கு பின்னர் தமிழ் தலைமை யார் என்றால் பதிலில்லை. இன்று ஈழத்தமிழ் மக்களை நோக்கி வரும் இராஜதந்திரிகளுக்கு கூட யாருடன் கதைப்பது? யார் தமிழ்மக்களின் குரலை சரியாக ஒலிக்கிறார் என்பதைக் கூட கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில் சிதறியிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களது பொதுவான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திலாவது ஒன்றாக வேண்டாமா? தாயகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழ்மக்கள் கட்சிகளாக, அமைப்புகளாக சிதறுண்டு இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அரசற்ற தேசம் ஒன்றுக்கு வலுவான சிவில் சமூக இயக்கம் ஒன்று அத்தியாவசியமானது. அது தாயகம் - தமிழகம் - புலம்பெயர் தேசத்தை இணைத்து கட்டப்பட வேண்டும். அப்போது தான் அரசற்ற தேசமென்றாலும் வலுவானதாக இருக்க முடியும்.
இப்போது இலங்கையில் அமெரிக்க - சீனத் தலையீடுகள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் தான் இந்தியா ஈழத்தமிழர்களை நோக்கி வருகிறது. ஆனால், தமிழ்மக்களுக்கு அடிப்படை தீர்வைக் கூட பரிந்துரைக்காத 13 ஐ தூக்கிக் கொண்டு இந்தியா வருவது தான் சிக்கலானது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் - புலம்பெயர் சமூகம் இணைந்து எங்களுக்கான தீர்வுப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அது ஈழத்தமிழர்களின் வெளிநாட்டுக் கொள்கையாக விரிவடைய வேண்டும். இதில் தமிழ்நாட்டையும் இணைத்துக் கொள்ளலாம். எங்களுக்கு பல்துறை சார்ந்த நிபுணர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்களின் உதவியைப் பெற்று அதனை செய்ய முடியும்.
ஏற்கனவே தமிழ்மக்கள் பேரவை முன்வைத்த தீர்வுத் திட்டம் இருக்கிறது. அதற்கு முன்னர் புலிகளால் முன்வைக்கப்பட்டு அரசோடு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட இடைக்கால நிர்வாக அரச வரைபு இருக்கிறது. இவற்றையும் தாண்டி இப்போதுள்ள நிலைமைகளை வைத்து எம்மால் சரியான தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியும்.
புலம்பெயர் தமிழ்மக்கள் என்னதான் பொருளாதார முதலீடுகளை இங்கு மேற்கொண்டாலும் சரியான அரசியல் தீர்வில்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் தமிழ்மக்களுக்கு அதிகாரமில்லாத போது இங்கே சிங்கள அரசு தான் எதையும் தீர்மானிக்கும். இதனால் தான் புலம்பெயர் பெரும் முதலீட்டாளர்கள் இங்கே முதலீடு செய்ய பின்னடிக்கின்றனர். நாடு இன்று பொருளாதார ரீதியாக பெரும் வீழ்ச்சியை சந்தித்த போது புலம்பெயர் தமிழ்மக்களை வா வா வென அழைக்கிறது. வடக்கு கிழக்கில் வந்து முதலீடுகளை செய்ய விட்டு பின் தென்பகுதியில் முதலீடு செய்தால் சில சலுகைகளை வழங்குவோம் என அரசு அறிவிக்கும். இதனால் புலம்பெயர் தமிழர்கள் குழம்பிப் போகும் நிலை உள்ளது.
புலம்பெயர் தமிழர்கள் இங்கே அரசியலிலோ அல்லது பொருளாதாரத்திலோ மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் நீண்டகால இனப்பிரச்சினை தீர்க்கப்படுவது முதன்மையானது. அது கட்டாயமானதும் கூட. அதனை விடுத்து கூட்டமைப்பினர் நல்லாட்சி காலத்தில் இணைந்தது போன்று மனத்தால் இணைந்து எதுவும் நடக்காது. ஏனெனில் இப்போது தான் தமிழர் தாயகத்தில் புத்த ஆக்கிரமிப்பு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு நோக்கி நாம் சரியான வழியில் செயற்படுவது முக்கியமானது. அதனை தவிர்த்து முன்னேறி சென்றால் இடையில் தடுமாறி விழுவதை யாராலும் தடுக்க முடியாது.
-அமுது-