அயன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு
படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் அனைத்துமே ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டிருந்தது. சூர்யா கதைக்கு ஏற்றாற் போல மாறி சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.
மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அயன். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி இந்தப் படம் வெளியானது.தமன்னா, பிரபு, அக்ஷதீப், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைத்தன. காலம்சென்ற கவிஞரும், பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் எழுதிய விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் பாடல் காதல் ஜோடிகளின் ரீங்காரமாய் இன்றளவும் இருந்து வருகிறது.
கவிஞர் வைரமுத்து எழுதிய நெஞ்சே நெஞ்சே பாடல் பாலைவனத்தில் படமாக்கப்பட்ட விதமும் நடனமும் ரசிக்கும்படியாக இருந்தன.இந்தப் படம் தங்கத்தை எப்படியெல்லாம் அரசுக்கு தெரியாமல் கடத்தி வருகிறார்கள் என்பதை படம்பிடித்து காட்டியிருக்கும்.
இந்தப் படத்தின் கதையை பிரபல எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதினார் கே.வி.ஆனந்த். எம்.எஸ்.பிரபு கேமிராமேனாக பணிபுரிந்திருந்தார்.
வில்லான அக்ஷ்தீப் நடிப்பில் மிரட்டியிருந்தார். ‘லட்டுல வெச்சேன் நினைச்சயமா நட்டுல வெச்சேன்’ என இவர் பேசிய வசனமும் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியும் பெரிதாக ரசிக்கப்பட்டது.
அதேபோல், படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் அனைத்துமே ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டிருந்தது. சூர்யா கதைக்கு ஏற்றாற் போல மாறி சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். சூர்யாவுக்கு திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகவும் அயன் மாறியது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்து இருந்தது. சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் ஆகின்றன.