புங்குடுதீவு அல்ல பொன்கொடுதீவு வேலணை பாலம் அமைத்தவரின் கதை
புங்குடுதீவையும் வேலணை தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி 'வாணர் சகோதரர்களின்' அரிய முயற்சியின் பலனாக இன்றும் உறுதியாக நிற்கின்றது. அக்காலத்தில் இச்செயற்றிட்டம் நிறைவேற முன்னின்றுழைத்த "வாணர் சகோதரர்களை" காலங்காலமாக நினைவுகூர்ந்து, எமது வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
வேலணைத்தீவையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை, பண்ணை 'தாம்போதி' என்று அழைக்கப்படுகின்றது. புங்குடுதீவில் பிறந்த 'அம்பலவாணர்' என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் இடப்பட்டது. சுமார் 04.80 கிலோமீற்றர் நீளமான இத்தாம்போதி, புங்குடுதீவு மக்களின் நீண்டகால முயற்சியின் பின்பே அமைக்கப்பட்டது. அகலமான வீதி, ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட 04.80 கி.மீ பாதையில் அமைந்திருக்கின்றன.
'பெரிய வாணர்' படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார் மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி 'மலாயா- புங்குடுதீவு ஐக்கிய சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார். 1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர், முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள்தோறும் சென்று கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார். 1922 ஆம் ஆண்டு, 'புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம்' என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கொண்டனர்.
இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு, 'அகில இலங்கை மகாஜன சேவா சங்கம்' என்று பெயர்மாற்றினார்கள். இவ்வமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்துவந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அதன் பலனாக 1935ல் வருடத்தில், 'இலங்கை சட்டநிரூபண சபையில்', தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது ஆங்கிலேயப் பிரதிநிதி 'சேர் வில்லியம்' உட்பட்ட குழு நிலைமையை நேரில் கண்டது. அதன் பலனாக அனுமதியுடன், நிதியும் கிடைத்தது.
'வாணர் சகோதரர்கள்' கண்ட கனவு நனவாகியது.1935ம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி கட்டுமான வேலைகள் ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளிலும் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் '3701 வாக்குகளையே' பெறமுடிந்தது. புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். இது தமிழர்களின் நிலைமை, சேவை செய்யக்கூடியவர்களை ஒதுக்கி வைப்பதுதான் தமிழரின் அறியாமை. பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற 'அல்பிரட் தம்பிஐயாவை' அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்திசெய்து தருமாறு கேட்டுக்கொண்டார். மிகுந்த சிரமங்களின் மத்தியில் பாலத்தின் கட்டுமானப்பணிகள் சிறிது சிறிதாக நிறைவடைந்தது. 1948இல் பெரியவாணர் மறைந்தார்.
எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார். அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானது துரதிஷ்டமே. புங்குடுதீவு மக்கள் இப்பாலம் அமைக்கப்படாத காலத்தில் பட்ட கஷ்டங்களை 'வித்துவான் சி.ஆறுமுகம்' அவர்கள் கவிதையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார். "தோணிகளிற் காலைவைத்து ஏறின் கொஞ்சத் தூரந்தான் மிதக்குமவை! போறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன நாணின்றி ஆடைகளைத் தூக்கி நடுக்கடலில் புதைசேற்றில் நடந்த காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும் தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவிட்டால்? நிறை மாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு இறைவா எம் விதியேதான் இதுவென்று ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு! மறையாதோ இக்கொடுமை என்றெண்ணி மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும் கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்ததாலே.." இக்கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஷ்டங்களை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.
பெரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய கல்விச்சாலைகளில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்தவர். 'திரு. க. அம்பலவாணர்' தனது பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்த பின்னர் தொழில்தேடும் பொருட்டு மலாயா சென்றார்.
1893ம் ஆண்டு பிறந்த 'சின்ன வாணர்' ஊரில் தொண்டுக்காக வாழ்ந்தவர்.
பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து, உடல் இளைத்து 1948ஆம் வருடம் நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இயற்கை எய்தினார்.
இன்றும் கம்பீரமாக வாணர் பாலம் நீண்டு, நிமிர்ந்து நிற்கின்றது.
காலங்கள் கடந்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழல்கள் மாறின, இன்று அம்பலவாணர் கலையரங்கம் அவரின் நினைவாக மலர்ந்திருக்கிறது.
இத்தகைய பெருந்தகைகளை நினைவுகூர்ந்து அவர்களது சேவைகளை வருங்கால சந்நதிகளுக்கும் தெரியப்படுத்துவோம்.