கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். தற்போது அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு நினைவிடம் கட்டி வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் 134 அடி உயரம் மற்றும் ரூ.81 கோடி செலவில் பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
கருணாநிதி நினைவிடத்தின் பின்புறம், கண்ணாடி பாலம் வழியாக கடலைக் கடந்து வந்து நினைவிடத்தை அடையும் வகையில் பெரிய வாயில் அமைக்க திட்டம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம் என்பது இந்த அற்புதமான கட்டமைப்பின் பெயர். சமீபத்தில் மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு 15 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கியது. இந்த ஒப்புதலின் விளைவாக, தமிழக அரசு தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவிடம் கட்டுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் விஸ்வநாதன், பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.