மூலநோயும் அதனைக் கட்டுப்படுத்தி குணமாக்குவதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுவகைகளும்

#Health #Lanka4 #ஆரோக்கியம் #சிகிச்சை #remedy #உணவு #லங்கா4 #Tamil Food
Kantharuban
4 months ago
மூலநோயும் அதனைக் கட்டுப்படுத்தி குணமாக்குவதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுவகைகளும்

மூலநோயானது பெரும்பாலும் உடற்சூட்டிற்கு வந்து சென்றாலும் கடினமானவை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படும். மற்றும் படி அந்த நோய் உள்ளவர்கள் உணவின் வழியாக அதனைக் கட்டுப்படுத்தலாம்.

இன்றைய பதிவில் மூலநோய் பற்றிப் பார்க்கலாம்.

மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியதாகும்.

 மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது. மூல நோயில் உள்மூலம், (Internal piles), வெளிமூலம் (External piles), பவுத்திர மூலம் (Fistula) மூன்று வகைகள் உள்ளது.

 அது நான்கு கட்டங்களாக பிரித்துள்ளனர். அதில் மிகவும் எரிச்சலுடன் கஷ்டப்பட்டு மலம் கழிப்பவர்கள் முதல் நிலையில் இருக்கின்றனர். 

மலம் கழிக்கும்போது ரத்தம் வருதல் மற்றும் ஆசன வாயை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் இருந்தால் அது இரண்டாம் நிலை.

மலம் கழிக்கும்போது சிறிய சதைப்பகுதி வெளியே வருவதும், மலம் கழித்து முடித்தவுடன் மீண்டும் சதைப்பகுதி உள்ளே சென்றுவிடுவதும் மூன்றாம் நிலை.

 மலம் கழிக்கும்போது, வெளியே வரும் சதைப்பகுதியானது. மீண்டும் உள்ளே செல்லாமல் அப்படியே வெளியே நின்றுவிடுவது நான்காம் நிலை. 

இதுபோன்று கஷ்டப்பட்டு, அழுத்தம் கொடுத்து மலம் கழிக்கும் நிலை ஏற்படும்போது, உள்ளே இருக்கும் ரத்த குழாய் வெடிப்பு விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். பின்னர், அதுவே வேறு சில பிரச்னைகளையும் உடலில் தோற்றுவித்துவிடலாம். 

எனவே, ஆரம்ப நிலையிலேயே இதிலிருந்து விடுபட, உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம் என்கிறார் யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்கள்.

 தண்ணீர்பொதுவாக, எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1-2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதிலும், தற்போது கோடை தொடங்கிவிட்டது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் தினசரி குறைந்தபட்சம் 2 – 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

 அப்படி தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்றால், பழச்சாறுகள், இளநீர், மோர் அல்லது சீரக தண்ணீராகவோ எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் போதிய அளவில் உடலில் இருந்தாலே, அவை உடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளித்தள்ளும். 

நார்ச்சத்தும் – நீர்ச்சத்தும் 

நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நார்ச்சத்து நிறைந்த அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளையும்,

 நீர்ச்சத்து நிறைந்த, சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், செளசெள, முள்ளங்கி, முட்டைகோஸ், பூசணிக்காய், வெண் பூசணிக்காய் போன்றவற்றையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது. மூல நோய் உள்ளவர்கள் கிழங்கு வகைகளில், கருணைக்கிழங்கு மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

அதேசமயம், கருணைக்கிழங்கு அதிகளவு சூடானது என்பதால், கருணைக்கிழங்குடன் பாசிபருப்பு சேர்த்து சமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிடலாம். அதுபோன்று, சமையலில் வெங்காயம், இஞ்சி – பூண்டு ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

 இஞ்சி – பூண்டை விழுதாக இல்லாமல், பொரியல்களில் தட்டி போட்டோ அல்லது நறுக்கிச் சேர்த்தோ சமைப்பது நல்லது. பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

ஆனால், மோர், தயிராக எடுத்துக் கொள்ளலாம். கீரைகள்வாரத்திற்கு 3 நாட்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு கீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக எல்லா கீரையும் நல்லதுதான், சத்தும் நிறைந்தது. 

பழங்கள்மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள் முக்கியமாக தினசரி ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பழம் அதிகளவில் நார்ச்சத்தும் இதர சத்துகளும் அடங்கியது. 

அதேசமயம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, அவர்கள் வாழைப்பழத்துக்கு பதிலாக பப்பாளி பழம் சில துண்டுகள் தினசரி எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்று கொய்யாக்காய், கிர்ணிப்பழம், தர்பூசணி போன்றவற்றை ஜூஸாக எடுத்துக் கொள்ளாமல் பழங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். 

இது தவிர, மாதுளம் பழம், அன்னாசி, ஆப்பிள், சப்போட்டா மற்றும் உலர் பழங்களான, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.மேலும், காய்ந்த திராட்சையை பொருத்தவரை, சீரகம் கொதிக்க வைத்த தண்ணீரில் ஒரு பத்து காய்ந்த திராட்சையை இரவே ஊற வைத்துவிட்டு, காலை எழுந்ததும், பல் தேய்த்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, காய்ந்த திராட்சை ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால். விரைவில் படிப்படியாக மலச்சிக்கலின்போது ஏற்படும் எரிச்சல், வலி எல்லாம் குறைந்துவிடும்.

 மூலிகைகள்துத்தி இலை பச்சையாக கிடைத்தால், அரைத்து சாறு எடுத்து குடித்து வரலாம் அல்லது சின்ன வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து துவையலாக செய்து சாப்பிடலாம். இது சதை வளர்ந்து ரத்தம் வடியும் நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பிரண்டை துவையல், வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வதும் பயன்தரும்.கடுக்காய்ப் பொடி அல்லது திரிபலா சூரணத்தை அரை தேக்கரண்டி வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் விரைவில் குணமாகும்.

அருகம்புல் வேர்ப்பொடி. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது. இது ரத்தமாக வருபவர்களும், கொப்புளங்கள் இருப்பவர்களும் இந்தப் பொடியை கஷாயமாகவோ அல்லது அரை ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீர் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். 

ரோஜா இதழ்களில் தயாரிக்கப்பட்ட குல்கந்து அல்லது ரோஜா இதழ்களுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். சிறுதானிய வகைகள்சிறுதானிய வகைகளில் அனைத்துமே சேர்த்துக் கொள்ளலாம். கேழ்வரகு கூழ் மிகவும் நல்லது.

 அதுபோன்று பச்சைபயறு, காராமணி, கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம், இந்த சுண்டல் வகைகள் சாப்பிட்டதும், ஒரு டம்ளர் சீரகம் கலந்த வெந்நீர் அருந்துவது நல்லது.தவிர்க்க வேண்டிய உணவுகள் பச்சரிசி சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

மைதா சார்ந்த உணவுகளான பிரெட், பன், பிஸ்கட், ரஸ்க்,, கேக், பரோட்டா, நூடுல்ஸ், பர்கர் போன்றவற்றை தவிர்ப்பது. எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக மசாலா சேர்த்த காரமான உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது மிகமிக அவசியமானது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு