இன்றைய வைகாசி சஷ்டி விரதமிருத்தல் முறையும் அதன் பலன்களும்.
இன்று வைகாசி சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது கார்த்திகை விரதத்திற்கு அடுத்ததாக முருகப்பெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாகும்.
ஆரண்யம் என்றால் காடு. முருகனின் துணையான தெய்வானையை சஷ்டி தேவி என அழைக்கிறார்கள். இவரை நோக்கி இருக்கப்படும் விரதமே ஆரண்ய சஷ்டி விரதம் அல்லது வனகெளரி விரதம் ஆகும்.
இந்த மாதத்தில் வரும் சஷ்டி திதியும், விசாகம் நட்சத்திரமும் முருகனின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களாகும். அனைத்து மாதங்களிலும் வரும் சஷ்டி திதி, முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்றாலும் முருகப் பெருமானுக்குரிய வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி திதி, அதிலும் வளர்பிறை சஷ்டி திதி வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்ததாகும்.
திதிகளில் ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி. இதனால் இது ஆறுமுகனை வழிபட ஏற்ற திதி ஆயிற்று.
முருகப் பெருமான், நரசிம்மர், திருஞானசம்பந்தர், திருக்கோட்டியூர் நம்பிகள், காஞ்சி மகா பெரியவா போன்ற தெய்வீக அவதாரங்கள் நிகழ்ந்த மாதம் வைகாசி மாதமாகும்.
இந்த மாதத்தில் எந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டாலும் முந்தைய பிறவிகளிலும், இந்த பிறவியிலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, வளமான வாழ்வு பெற முடியும்.
2023 ம் ஆண்டில் வைகாசி வளர்பிறை சஷ்டியானது மே 25 ம் தேதி வருகிறது. அதிகாலை 3 மணிக்கே சஷ்டி திதி துவங்கி விடுவதால் இந்த நாளில் காலையிலேயே விரதத்தை துவக்கி விட வேண்டும்.
வைகாசி வளர்பிறை சஷ்டி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, வீட்டிலுள்ள முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி மலர்கள் சூட்டி, விளக்கேற்றி வழிபட வேண்டும், நைவேத்தியமாக கேசரி அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து படைத்து, முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சரவண கவசம் போன்றவற்றை பாடி விரதத்தை துவக்க வேண்டும்.
அன்று காலையும் மாலையும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய வேண்டும். பகல் முழுவதும் உபவாசமாக இருந்து, முக்கண்ணன் மைந்தனின் நாமத்தை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
இந்த நாளில் மெளன விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். மாலையில் வீட்டிலும், கோவிலும் விளக்கேற்றி முருகனை வழிபட வேண்டும். மாலையில் முருகனுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
வைகாசி வளர்பிறை சஷ்டி அன்று விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்த எதிர்ப்புக்கள் நீங்கும்.
வழக்குகள் தீரும். திருஷ்டி தோஷங்கள் நீங்கும். நீறண்ட நாட்களாக வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிப் போகிறவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். முருகனுக்குரிய சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு கேட்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும்.
மனதில் உள்ள பயம் அனைத்தும் விலகும், எடுத்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி தேவி வரும்.
சஷ்டி திதி அன்று, "ஓம் சரவண பவாய நம" எந்த மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரித்தபடி இருப்பது ஆயுள், ஆரோக்கியம், புகழ், செல்வம் என அனைத்து நலங்களையும் அள்ளித் தரும். இந்த ஆறெழுத்து மந்திரம் நம்மை எப்போதும் கவசம் போல் இருந்து அனைத்து தீமைகளில் இருந்தும் காக்கும்.
இவ்விரதத்தின் மகிமையைப் விளங்கியவர்கள் மற்றும் தவறவிட்டவர்கள் வரும் ஆண்டு இதனை அனுஷ்டித்துப் பயனடையுங்கள்.