இரண்டு நாட்கள் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு, ஐந்து மாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கட்ட 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்குகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கட்சியின் தேசிய நிர்வாகிகள் மூன்று மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தேர்தல் குறித்தும், நாளை சத்தீஸ்கர் தேர்தல் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்துள்ள காங்கிரஸ், அந்த வெற்றியை மற்ற மாநிலங்களிலும் பிரதிபலிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த இலக்கை எட்டுவது தொடர்பாக இந்தக் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.