மெரினா கடற்கரையில் மக்களை துன்புறுத்தக் கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

#Police #Court Order #Tamil People #beach #TamilNadu Police
Mani
1 year ago
மெரினா கடற்கரையில் மக்களை துன்புறுத்தக் கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தலைநகரான சென்னையில் வெயிலின் தாக்கம் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்குள்ளும், அலுவலகங்களுக்குள்ளும் ஏசி காற்று வாங்கு களைத்துபோன மக்கள் இயற்கை காற்றை தேடி மெரினா கடற்கரை பக்கம் குவிந்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மாலை நேரங்களில் கடற்கரை சென்று இரவு வீடு திரும்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் மெரினா கடற்கரை வியாபாரிகளின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களின் நிலையை கணக்கில் கொள்ளாமல் மெரினா கடற்கரை வரும் பொதுமக்களை 10 மணிக்கு மேல் அங்கு இருக்க அனுமதி இல்லை எனக்கூறி போலீஸார் அடித்து விரட்டுவதாக சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கோடை வெயில் 40 டிகிரி செல்சியசை தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பத்தை தணிக்க மக்களுக்கு கடவுள் கொடுத்த கொடையாக மெரினா கடற்கரை உள்ளது எனவும், இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழலில், இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரையில் இருக்க கூடாது எனக் கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துவதாகவும், காங்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டிடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதுடன், தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலையும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் பல இடங்களில் கடைகள் மற்றும் ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அரசு அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மனுதாரர் , வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால், கடற்கரைக்கு வரும் மக்களை இரவு 10 மணிக்கு மேலும் அனுமதிக்கவும், அவர்களை போலீஸார் துன்புறுத்த கூடாது எனவும் கேட்டுக்கொண்ட மனுதாரர், இது குறித்து காவல் துறையினருக்கு அறிவுறுத்தவும் கேட்டு அரசு அதிகாரிகளுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, மெரினா செல்பவர்களை காவல் துறையினர் எப்படி துன்புறுத்துகின்றனர்? என்ன ஆதாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.