ஞாபகசக்தியை கூட்டும் வல்லாரையின் வேறு பயன்கள்!
வல்லாரை கீரை வகைத்தாவரமாகும். இது இலங்கையில் வீடுகளில் வளர்க்கப்படுவதுடன், நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படும். இது பொதுவாக Centella asiatica என்ற விஞ்ஞானப் பெயரைக்கொண்டது.
வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிபடுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்றுதின்றால், வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்துவிடும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும். தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவும். உடல் சோர்வு, பல்நோய்களை கட்டுப்படுத்தும். படை போன்ற தோல் நோய்களை குணப்படுத்தும்.
அஜீரணக் கோளாறுகளை குறைக்கும். கண் மங்கலை சரி செய்யும். உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும்.
வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். இந்தக் கீரையை சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். வல்லாரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால், வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும். பசுமை இலைகள் குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.
இத்தகைய அரிய மூலிகைக் கீரையான வல்லாரையை நீங்களும் உங்கள் வீடுகளில் வளர்த்து உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுத்தலாம்.