பிரமாண்டமான புதிய நாடாளுமன்றத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால், புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன் படி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்றம் திறப்பை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியை இணைக்கும் பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.