வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்

#India #Tamilnews #Rocket #ISRO
Mani
1 year ago
வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா

நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள என்விஎஸ்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

வழிகாட்டி செயற்கைக்கோளான என்விஎஸ்-01 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான கவுன்ட்டவுனை நேற்று காலை தொடங்கியது. 27.30 மணி நேர கவுன்ட்டன் முடிவில் இன்று காலை 10.42 மணிக்கு செயற்கைக்கோளை ஏந்தியவாறு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதள மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-01 செயற்கைக்கோள், இந்த வகை செயற்கைக்கோள்களில் முதன்மையானது. இது 2,232 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோளில் முதன் முதலாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. பூமி சுற்றும் திசைக்கு ஏற்ப ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 19-வது நிமிடத்தில், அதில் இருந்து செயற்கைக்கோள் புவி வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்துவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக சுற்றுப்பாதையை அடுத்தடுத்து உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.