சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வெற்றி கோப்பை!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக் கோப்பை இன்று (மே 30) சென்னை வந்தடைந்தது. நடப்பு ஐபிஎல் சீசன் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 29) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்கள் எடுத்தது.
இதனால் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டிஎல்எஸ் விதிப்படி 15 ஒவர்களுக்கு 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணியில் கான்வே, துபே, ஜடேஜா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியம் பட்டம் வென்றது.
இந்தநிலையில் குஜராத்தில் இருந்து இன்று மதியம் 2.30 மணியளவில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங், தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது வெற்றிக் கோப்பையை அவர்கள் கொண்டு வந்தனர். இந்த வெற்றிக் கோப்பையானது சேப்பாக்கம் மைதானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெற்றி கோப்பை சென்னை விமான நிலையத்திற்கு வந்ததும் ரசிகர்கள் "சிஎஸ்கே" "சிஎஸ்கே" என்று கோஷமிட்டனர்.