வைகாசி விசாகத்தன்று அடியார்கள் விரதமிருக்கும் முறையும் பலன்களும்.
இந்த ஆண்டு வைகாசி விசாகமானது ஜூன் 03 ம் தேதி சனிக்கிழமை வருகிறது.
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும்.
அதே போல் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமையில்லை, வீட்டில் எப்போதும் சண்டை, கணவன் - மனைவிக்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமே இல்லை, முன்னேறுவதற்கு ஏதாவது ஒரு தடை இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், நீண்ட காலமாக நோயால் அவதிப்படுபவர்கள், வழக்கு விவகாரங்கள் சிக்கிய தவிப்பவர்கள் ஆகியோர் வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானிடம் தங்களின் கோரிக்கையை முன் வைக்கலாம்.
வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி, முருகப் பெருமானை வழிபடலாம். அன்றைய தினம் முழு உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் முருகனை நினைத்து, அவருக்குரிய மந்திரங்களை, பாடல்களை பாராயணம் செய்து வழிபடலாம்.
நைத்தியமாக சர்க்கரைப் பொங்கல், பருப்பு பாயசம், கற்கண்டு கலந்த பால் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
இந்நாளில் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்து வரலாம்.
வைகாசி விசாகத்தன்று அருகில் உள்ள கோவில்களில் முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுக்கலாம். அல்லது வீட்டிலேயே முருகனின் விக்ரஹம் அல்லது வேல் இருந்தால் அவற்றிற்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
அன்றைய தினம் வேல் விருத்தம், மயில் விருத்தம் ஆகிய பாடல்களை பாராயணம் செய்து முருகப் பெருமானின் அருளை பெற்றுத் தரும். விசிறி, பானகம், நீர்மோர், தண்ணீர், குடை என குளுமையை தரக் கூடிய ஏதாவது ஒன்றை தானமாக கொடுத்தால் நமது வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி, மனத்திற்கு இதம் தரும் வகையில் வாழ்க்கை வசந்தமயமாக மாறும்.
வைகாசி மாதம் என்பதே கோடை காலம் நிறைவடைந்து வசந்த காலம் துவங்குவதற்கான ஆரம்பம் தான். அதனால் கோடை காலத்தின் நிறைவாக இந்த விரதத்தினை அனுஷ்டிக்கலாம்.
மாலை முருகன் பிரசாதத்தை உட்கொண்டு விரதத்தினை முடிக்கலாம்.