பாகிஸ்தான் வீழ்த்தி 4-வது முறையாக மகுடம் சூடிய இந்திய அணி
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப்போட்டியில் இந்தியா 2 கோல்களையும், பாகிஸ்தான் ஒரு கோலையும் அடித்தன. போட்டி தொடங்கிய 13ஆவது நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், 20ஆவது நிமிடத்தில் அரைஜீத் சிங் ஹுன்டாலும் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு வலு சேர்த்தனர்.
இந்த முறை வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா பெற்ற ஜூனியர் ஹாக்கி கோப்பைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2004, 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஜூனியர் ஆசியக் கோப்பையை இந்தியா வென்றிருந்தது. ஜூனியர் ஆசியக் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஆடவர் அணிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிவீரர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.