மாம்பழம் ஒரே தடவையில் 2 கிலோவிற்கும் அதிகமாக உட்கொள்ளலாம். அதன் ஏனைய ஆரோக்கியப் பண்புகள்...
மாம்பழம் மாமரத்தில் கோடை காலத்தில் அதுவும் தற்போதைய வெப்பத்தில் கொளு கொளுவேன பழுத்துத் தொங்கும் கனியாகும்.
முக்கனிகளுள் ஒன்றான மாம்பழம் Mangifera Indica என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படும்.. மாம்பழம், பழமாகவும், சாறாகவும், பாலுடன் கலந்தும், ஊறுகாயாகவும், குளிர்களி (Ice Cream) வடிவத்திலும், சர்க்கரையுடன் சேர்த்து உலர்த்தி இனிப்புக்கட்டிகளாகவும் (Chocolate) நம் வாழ்க்கையில் பயன்பட்டு வருகிறது.
இந்தப் பழத்தில் உயிர்ச்சத்துக்களான A, B மற்றும் C , புரதம் முதலானவை அதிகம் உள்ளதால் கண்களுக்கு வலிமை தருகின்றது. வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். உதிரக்குறைகள் நீங்கும்.
இதயம் வலிமை பெறும். சித்தர்கள் மாம்பழத்தில் பல பக்கவிளைவுகள் உள்ளதால் சரியான முறிவுப்பொருளுடன்தான் உண்ணவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள்.
முறிவுப்பொருள்களாக அவர்கள் சொல்வது பால், தயிர், மற்றும் மாம்பழக் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு ஆகியவைதான். தனியாகச் சாப்பிடுவதால் கழிசலும், சொறி, சிரங்கு போன்ற தோல்நோய்கள் வரும் எனக்கூறுகிறார்கள்.
இந்த மரத்தின் மற்ற பாகங்களனைத்தும் சிறப்பு மருத்துவக் குணங்களுடையவை. மாலைக்கண் நோயுள்ளவர்கள், வயிற்று வீக்கமுடையவர்கள் (மகோதரம் என்று இதைச் சொல்வார்கள்), இளமையிலேயே தோல் சுருக்கமுடையவர்கள், நரம்புத் தளர்ச்சியுடையவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், கனிந்த மாம்பழங்களைப் பாலுடன் காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் உண்டுவந்தால் 40 நாட்களில் நல்ல முன்னேற்றமேற்படும்.
மற்ற எல்லாப் பழங்களையும் ஓரளவுக்குத்தான் சாப்பிட முடியும், ஆனால் மாம்பழம் மட்டும் இரண்டேகால் கிலோ அளவுவரை ஒரே நேரத்தில் உண்ணமுடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பு.
இதன் கொட்டையினை உடைத்துப் பருப்பினை எடுத்து நெய்யில் வறுத்துப் பொடியாக்கி எடுத்து வைத்துக்கொண்டு கால் தேக்கரண்டி அளவு தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் மாம்பழம் உண்ணுவதால் உண்டாகும் பக்கவிளைவுகளிருந்து தப்பலாம்.
மாவின் இலை, பூ, பிஞ்சு, கொட்டை, பட்டை, வேகப்பட்டை ஆகிய அனைத்துப் பொருட்களும் துவர்ப்புச் சுவையுடையதாகையால் நரம்புகளையும், தசை நார்களையும் இறுக்கிச் சிறப்பான உதிரப் பெருக்கு, சீழ்வடிதல் ஆகிவற்றை நிறுத்தக் கூடியது.
பட்டுப்போன்ற இளஞ்சிவப்பு நிறமுள்ள மாந்தளிர்களைப் பறித்து உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு போட்டுப் பின் ஆறியதும் பருகிவருவதால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
அடிக்கடி மூத்திரம் பிரிவது கட்டுப்படும். பச்சையாக அரைத்துச் சுண்டைக்காயளவு சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு நெல்லிக்காயளவும் மோர் அல்லது தயிரில் கலந்துதர வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, உதிர பேதி நிற்கும்.
இதன் முற்றிய இலைச்சாறு 4 தேக்கரண்டி, பால் 2 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி கலந்து 3 மணிநேரத்துக்கு ஒருமுறை உண்ண பெண்களின் பெரும்பாடு, மற்றும் மூல உதிரப் போக்கு நிற்கும்.
நாலைந்து இலைகளைப் பிய்த்துப் போட்டுத் தேன்விட்டு வறுத்து 1 சிறுகுவளை தண்ணீர்விட்டு 1/2 சிறுகுவளையாகச் சுருங்கும்படி கொதிக்கவைத்துக் குடிக்க சீதளத்தால் தொண்டைகட்டி குரல் கம்மிப் பேசுபவர்களுக்கு நல்ல குரல்வளத்தை உண்டாக்கி நலம்தரும்.
ஆனால் முழுவதும் குணமடையும் வரை காலை மாலை இருவேளை உண்டுவரவேண்டும்.
மாவின் பச்சையிலைகளை நெருப்பில் புகைத்து வாயால் இழுத்துவிட்டாலும் குரல் கம்மல் குணமடையும். விக்கல் நிற்கும். இந்து சாத்திரங்கள் மாவிலையில் செல்வமகள் (மகாலட்சுமி) வசிப்பதாகச் சொல்வது அதிலுள்ள நேர்மறைத் திறனாகும் (Positive Energy).
அதனால்தான், மாவிலை பண்டிகைக் காலங்களில், விழாக்களில் வாசலில் தோரணமாகவும், கலசங்களில் தேங்காயைச் சுற்றியும் கட்டப்படுகிறது. மாவிலையால் பல்துலக்காதவன் மாபாவி என்று ஒரு பழமொழி உண்டு.
அதனால் பெரியவர்கள் நோய்முறிவுக்கு மாவிலையால் வாய் கொப்பளிப்பு செய்தார்கள். மரத்திலிருந்து விழும் பூக்களை நெருப்பிலிட்டுப் புகைத்தால் நுளம்புகள் ஓடிவிடும்.
மாம்பிஞ்சை மாவடு என்று சொல்வார்கள். மாவடு ஊறுகாய் உண்பதால் நல்ல பசியுண்டாகும். வாய் குமட்டல், வாந்தி நிற்கும். மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும் என்னும் பழமொழி. பழக்கொட்டைப் பொடியைச் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண் பெரும்பாடு குணமாகும்.
உடற்சூடு குறையும். வேர்ப்பட்டையைக் கசாயம் செய்து அடிக்கடி அருந்த அடிக்கடி மூத்திரம் பிரிவது கட்டுப்படுத்தப்படும். தாகம் அடங்கும், பேதி நிற்கும்.
மாம் பிசினை 1/2 தேக்கரண்டி அளவு பாலுடன் சேர்த்துச் சாப்பிட பெரும்பாடு, வெள்ளைப்போக்கு குணமடையும். கால்வெடிப்பில் இந்தப் பிசினைத் தடவ வெடிப்பு நீங்கிக் கால்கள் வழவழப்பாகும்.
மாவின் சிறப்புகள் அதனைத் தெரிந்து முறையாகப் பயன்படுத்தினால் நமக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.
இவ்வளவு ஆரோக்கியப் பயன்கொண்ட மாம்பழம் உங்கள் வீட்டிலும் உண்டா? இல்லையாயின் அதனை சந்தையிலாவது பெற்று தகுந்த முறையில் தேவைக்கேற்றவாறு உட்கொண்டு நன்மையடையுங்கள்.