ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில், பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது பிரதமர் மோடி உடன் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இருந்தனர்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகள், நிவாரணம், ரயில் விபத்து, சிக்னலை தாண்டி ரயில் எப்படி சென்றது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றார். இதையடுத்து, ரயில் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
ரயில் விபத்து, மீட்பு பணி மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது அவர் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.