ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்

#Death #Accident #Train #Tamilnews #Breakingnews #Died
Mani
1 year ago
ஒடிசா ரெயில் விபத்தில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 278 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் மின்சாரம் தாக்கி 40 பயணிகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரெயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும், மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.