இந்தியாவை வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா அவர் சந்தித்த 2வது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர், பரத் (23 ரன்கள்) , ஷர்துல் தாக்குர் (0 ரன்கள்), உமேஷ் யாதவ் (1 ரன்), முகமது சிராஜ் (1 ரன்) ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய ரஹானேவும் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 234 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.