சிங்கள பௌத்த மயமாக்கலும் ஜனாதிபதியின் கருத்தும்!
இலங்கையில் யுத்தத்திற்கு பிற்பாடு வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் திட்டமிட்டு தொல்லியல் திணைக்களத்தினரூடாக அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் இன மோதலுக்கு வழிவகுத்த முக்கிய காரணிகளில் பௌத்த மயமாக்கலும் அடிப்படையாக அமைகின்றது.
இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என பொய்யான பரப்புரைகளை சிங்களவர்கள் மத்தியில் விதைத்த வண்ணம் ஒருசாரார் உள்ளனர்.
அதற்கு சான்றாக யாப்பினையும் உருவாக்கியுள்ளனர். பிற்காலத்தில் தமிழ் மன்னன் ராவணனையே சிங்கள அரசனாக சித்தரிக்க முயல்கின்றனர். அதற்கு பலமாக ராவண பலய என்ற பௌத்த பிக்கு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்த பொய்யை உண்மையாக்க முயல்கின்றனர்.
உண்மையில் வரலாற்றை நோக்கும் போது இற்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தற்கு அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் பௌத்தம் இலங்கையில் தோன்றி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் தான்.
ஆனால் பௌத்த பேரினவாதம் இதை மாற்றி தற்போது வரலாறை திரிபு படுத்த முயல்கின்றனர். தற்போது தொல்லியல் பிரதேசங்கள் என்று வடக்கு கிழக்கில் உள்ள புனிதமான இடங்களை தொல்லியல் வரலாற்று அடையாளங்கள் எனக் கூறி பௌத்த மயமாக்களுக்கு உட்படுத்துகின்றனர்.
அதற்கு தொல்லியல் துறையினரும் துணை போகின்றனர். வரலாற்றை முன்னோக்கி பார்த்தால் இலங்கையில் சிங்கள பௌத்த மதம் பின்பற்ற தொடங்கும் வேளையில் சிங்கள மொழியே இருக்கவில்லை பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பே சிங்கள மொழி தோற்றம் பெற்றது. வரலாற்றை நோக்கில் புத்தரை முதன்முதலில் வழிபட்டவர்கள் தமிழரே.
அதன் பின்பே பாலி மொழியில் இருந்து திரிபுபட்டு சிங்கள மொழி உருவானதை யாவரும் அறிந்ததே.. இலங்கையை தவிர வேறு எந்த நாட்டிலும் சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லாததால் இலங்கையை சிங்கள மொழியின் தாயகமாக்க சிங்கள பௌத்த பேரினவாதம் முயல்கின்றது.
ஆரம்ப காலங்களில் தமிழர்கள் புத்தரின் போதனைகளை பின்பற்ற தொடங்கனர். இந்த அடிப்படையில் நோக்கும் போது வெறுமனே இலங்கையை சிங்கள பௌத்த நாடாக்க முயல்வது வேடிக்கையானது.
இலங்கையை சிங்கள பௌத்தநாடாக காட்டுவதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு இருக்கும் நிலையில் தான் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பேச்சு சிங்களவர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகிவிட்டது.
ஜனாதிபதியின் பேச்சை மழுங்கடிக்கவும் சிங்கள பிக்குகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதி தமிழரின் வாக்கு வங்கிக்காக இவ்வாறு கூறுகின்றார் எனவும் சிங்கள இனவாதிகளும் பிக்குகளும் கூறுகின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் ஜனாதிபதியும் தனது நிலையில் இருந்து மாறிவதுவதாக தெரிகின்றது. அண்மையில் குறுந்தூர் மலையை அண்டியுள்ள காணிகளை பிரித்து கொடுப்பதாக ஜனாதிபதி கோரியிருந்தார் ஆனால் பௌத்த பிக்குகள் ஒன்று சேர்ந்து அதனை தடுத்து விட்டனர்.
இது இவ்வாறு இருக்க வடக்கு கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் பெருமளவான தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை தொல்லியல் திணைக்களத்தின் சுவீகரித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அப்பிரதேசங்களில் விகாரைகளை கட்டிவருகின்றனர். வெறுமனே தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் விகாரைகளை கட்டுவதன் மூலம் காலப் போக்கில் அதை வைத்து மெல்ல மெல்ல சிங்கள குடியேற்றங்களை திட்டமிட்டு இருத்துவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழர்களினுடைய இனப்பரம்பலை இல்லா து ஒழிப்பதே இவர்களது நோக்கமாகவும் உள்ளது. இதையே தொல்பொருள் மரபுரிமை எனும் பேரில் சிங்கள பௌத்த பேரினவாதம் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகின்றது.
ஆனால் ஜனாதிபதி இந்த விடயத்தில் தற்பொழுது ஜதார்த்தத்தினை வெளிப்படுத்தி நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கின்றார்.
எது எவ்வாறாக இருந்தாலும் தமிழர்கள் மட்டுமே வாழும் தமிழர்களுக்கு உரித்தான பூர்வீக நிலங்களில் விகாரைகளை அமைப்பது தொல்லியல் என்ற போர்வையில் நிலங்களை சுரண்டாமலும் இருந்தாலுமே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்.
-அமுது-