கேரள மாநிலத்தில் எட்டு மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழப்பு
இந்தியாவின் கேரள மாநிலத்தில் எட்டு மாதமேயான குழந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் மணற்காடு பகுதியைச் சேர்ந்த எபி.ஜோன்சி தம்பதியர்க்கு ஜோஸ் என்ற எட்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எபி.ஜோன்சி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், ஜோஸுக்குத் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனையடுத்து, குழந்தை கோட்டயம் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது..
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜோஸுக்கு கடந்த மே மாதம் 29ஆம் திகதி ‘இன்ஃபிளிக்சிமாப்’ என்ற ஊசி போடப்பட்டது. அம்மருந்தைச் செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அது தெரிந்திருந்தும் குழந்தை ஜோஸின் உடலில் கண்காணிப்புக் கருவிகள் எதுவும் பொருத்தப்படாமல் அவ்வூசி போடப்பட்டதாக அவனது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனால் குழந்தைக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பணியிலிருந்த பயிற்சி மருத்துவர்களும் தாதியரும் வந்து சிகிச்சை அளித்தபோதும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குழந்தைகள் நல மருத்துவமனை குறித்து சுகாதார அமைச்சரிடம் ஜோஸின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். ஆனால், குழந்தைக்கு ஏற்கெனவே இதய நோய் இருந்தது என்று மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார்.