ஆஸ்கர் விருது தேர்வுக்குழு RRR படக்குழுவினர் தேர்வு! அழைக்கப்படாத ராஜமௌலி வாழ்த்து
சினிமாத் துறையில் உயரிய விருதாக கருதப்படும் அகாடெமி விருதுகள் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரையுலக கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பட்டியலை மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் அகாடெமி வெளியிட்டுள்ளது. இதற்காக 398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.
தமிழ் திரையுலகில் இயக்குநர் மணிரத்னத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர் சூர்யா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் உள்ளனர். தனது நண்பரும், இயக்குநருமான மணிரத்னம் ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் கரண் ஜோகர் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர். படத்தின் நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, ஒளிப்பதிவாளர் கே.கே. செந்தில் குமார், திரைப்பட தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரில், பாடலாசிரியர் சந்திர போஸ் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் இயக்குநர் ராஜமௌலிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இந்த ஆண்டு அகாடமி விருதுகளுக்கு எங்களளது ஆர்ஆர்ஆ குழுவைச் சேர்ந்த 6 பேர் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் தாரக், சரண், பெத்தன்னா, சாபு சார், செந்தில் மற்றும் சந்திரபோஸ் சார். மேலும், இந்த அழைப்பைப் பெற்ற இந்திய சினிமா உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.