சித்தர்களுக்கும் பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பு
சித்தர்களுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதிலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி, மிகவும் விசேஷமானது. சித்தர்கள் என்றாலே, முதலில் நினைவுக்கு வருபவர் அகத்தியர்.
அவதார மூர்த்தியான ஸ்ரீ ராமராலேயே வணங்கப்பட்டவரல்லவா அகத்தியர். அப்படிப்பட்ட அகத்தியர் அம்பிகையிடம் வேண்டும்போது, ‘‘சித்திரைத் திங்களில் வந்து அருள் செய்யம்மா!’’ என வேண்டுகிறார்.
அகத்தியர் வேண்டுகோள்படி ‘சித்திரை’யைப் பார்த்த நாம், சித்தபுருஷர்களுக்கும் சித்திரை மாதத்து பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பைப் பார்க்கலாம்.
செல்வங்களிலேயே மிகப்பெரும் செல்வமாக இருப்பது ‘நோயற்ற வாழ்வு’ அதாவது, ஆரோக்கியமான வாழ்வு.
அதனால்தான் பதினாறு பேறுகளைச்சொல்ல வந்த அபிராமி பட்டர் ‘அகிலமதில் நோயின்மை’ என நோயற்ற வாழ்வுக்கு முதலிடம் கொடுத்தார். வள்ளலாரும் ‘நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்’ எனப் பாடியிருக்கிறார்.
ஆகையால் ‘நோயற்ற வாழ்வு’ தான் முக்கியம். அது இருந்தால்தான் காசு-பணம், சொத்து-சுகம், படிப்பு-பதவி என அனைத்தையும் அனுபவிக்க முடியும்.
ஆரோக்கியம் இல்லையென்றால், அனைத்தும் இருந்தும் பலனில்லை. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வில் மனிதகுலம் வாழ வேண்டும் என்பதற்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்த புருஷர்கள்.
அதற்காக சித்ரா பௌர்ணமியின் உண்மையைக் கண்டுபிடித்து, அதை மனித குலத்திற்கு வெளிப்படுத்தியவர்கள் – சித்த புருஷர்களே. சித்ரா பௌர்ணமியன்று இரவில், முழு நிலவின் வெளிச்சத்தில், சில ஊர்களில் பூமியில் இருந்து ஒருவகை உப்பு பூரித்து வெளிக்கிளம்பும்.
இதைப் ‘பூமிநாதம்’ என்பார்கள். இந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கக்கூடியது. இரசாயன மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் இந்த உப்பு, ‘சித்ரா பௌர்ணமி’யன்று வெளிப்படுவதைக் கண்டுபிடித்து, வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்களே.
இதன் காரணமாக சித்ரா பௌர்ணமி, `சித்தர் பௌர்ணமி’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியரின் அருந்தமிழ்ப் பாடலைப் பாடி, ஆரோக்கியமான வாழ்வை வேண்டுவோம்!