சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 500 பேட்டரி ஆட்டோ வசதி தொடக்கம்!
சென்னை
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 2024-ம் ஆண்டுக்குள் 500 பேட்டரி ஆட்டோ வசதி ஏற்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சர்வதேச தரத்தில் வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, மின்தூக்கி, நகரும் படிக்கட்டு வசதி, இணைப்புவாகன சேவை உட்பட பல்வேறு வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. இதன்தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில்நிலையங்களில் 500 பேட்டரி ஆட்டோக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து தனியார் அமைப்புகளுடன் இணைந்து 40 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், 60 பேட்டரி ஆட்டோக்களை இயக்க உள்ளோம். வரும் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் 500 பேட்டரி ஆட்டோக்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.