சனி தோஷத்திலிருந்து நம்மை விடுவிக்க சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம்
சனி பகவானுக்குரிய மூல மந்திரமான "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரெளம் ஷக் சனைச்சராய நமஹ" என்ற மந்திரத்தை 40 நாட்களில் 19,000 முறை கூற வேண்டும். இதனால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.
சனிக்கிழமையில் கருப்பு உளுந்து, எள், குடை, இரும்பு, செருப்பு என சனி பகவானுக்கு உரிய பொருட்களை தானமாக வழங்குவதும் சனி பகவானின் அருளை பெறுவதற்குரிய எளிய வழி ஆகும்.
சனி பகவானை கண்டு பயப்படாதவர்கள் இருக்க முடியாது. சனி பகவானுக்கு குருவாக இருந்த போதிலும் சிவ பெருமானும் கூட சனியில் பிடியில் இருந்து தப்பாமல் படாதபாடு பட்டுள்ளார்.
சனி தோஷம் ஏற்பட்டால் அந்த நபர் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்க வேண்டிவரும். இந்த சனி தோஷம் விலக, அதன் பாதிப்பில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
இந்த சந்தேகம் ஒரு முறை நாரதருக்கும் வந்தது. தனது சந்தேகத்தை சிவபெருமானை சந்தித்து கேட்டார் நாரதர். என்ன செய்தால் சனியால் ஏற்படும் துன்பங்கள் விலகும்? இதற்கு ஏதாவது வழி உள்ளதா? என கேட்டார் நாரதர்.
அதற்கு பதிலளித்த சிவ பெருமான், நாரதரே இதை கவனமாக கேளுங்கள். இதை கேட்பவர்கள் கூட சனியால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என சொல்ல ஆரம்பித்தார்.
ரகு குலத்தில் பிறந்த தசரதனின் ஆட்சி காலத்தில் சனி பகவான், ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வந்தது. சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு பூமியில் கொடிய நோய்கள் பரவி, அதிக துன்பம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது.
மக்களை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற என்ன வழி என குல குரு வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகள் மற்றும் அமைச்சர்களை அழைத்துக் கேட்டார் தசரதன். ஆனால் வசிஷ்டர், இது உலக மக்கள் துன்பப் பட வேண்டிய காலம். இதை தடுப்பது யாராலும் முடியாத காரியம் என்றார்.
ஆனால் மக்கள் துன்பப்படுவதை பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும். சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை தடுக்க ஏதாவது செய்து, மக்களை காக்க வேண்டும் என நினைத்த தசரதன், வஜ்ஜிரக் கவசம் அணிந்து கொண்டு வில், அம்புகளுடன் நட்சத்திர மண்டலத்திற்குள் சென்றார்.
அங்கு சூரிய மண்டலத்தை தாண்டி வெகு தூரத்தில் பிரகாசித்து கொண்டிருந்த ரோகிணி நட்சத்திரத்தை பின்னால் தொடர்ந்து, அதை பாதுகாக்க துவங்கினார். இதை கண்ட சனி பகவான், தசரதனை தடுத்து நிறுத்த, தனது கொடிய பார்வையால் தசரதனை பார்த்தார்.
ஆனால் சனியின் கெடு பார்வை தசரதனை ஒன்றும் செய்யவில்லை. இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட சனி பகவான், மகா வீரனான ராஜராஜனே என்னை எதிர்க்க இதுவரை யாரும் நினைத்தது இல்லை. அப்படி எதிர்க்க நினைப்பவர்களும் என் பார்வை பட்டவுடன் சாம்பலாகி விடுவார்கள்.
ஆனால் நீ நிறைய புண்ணியம் செய்திருக்கிறாய். அதனால் என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய். உனக்கு வேண்டிய வரங்களை கேள். நீ என்ன வரம் கேட்டாலும் தருகிறேன் என்றார் சனி பகவான்.
அதைக் கேட்ட தசரதன், ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உலக மக்களுக்கு எந்த துன்பத்தையும் நீங்கள் தரக் கூடாது. சூரியன், சந்திரன் உள்ளவரை அனைத்து காலங்களிலும் நீங்கள் மக்களை துன்பப்படுத்தக் கூடாது என்று வரம் கேட்டார்.
அப்படியே ஆகுக என வரம் கொடுத்தார் சனி பகவான். அதோடு உனக்காக இன்னும் ஒரு வரம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். என்ன வேண்டுமோ கேள் என்றார் சனி பகவான்.
அப்போதும் உலக மக்கள் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றே கேட்டார் தசரதன். அந்த வரத்தை உனக்கு ஏற்கனவே அளித்து விட்டேன். இப்போது உனக்காக வேறு ஏதாவது வரம் கேள் என்றார் சனி பகவான்.
வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை மனதில் நினைத்து வணங்கி விட்டு, சனி பகவான் மீது ஸ்தோத்திரம் ஒன்றை பாட துவங்கினார் தசரதன்.
தசரதன் இயற்றிய சனி ஸ்தோத்திரம் :
" நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச அதோத்ருஷ்டே, நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே நமோ மந்த கதே, துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம ஞான சக்ஷூர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸூநவே துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸூதத்க்ஷணாத்"
சனி பகவானின் அருளை வேண்டி தசரதன் சொன்ன இந்த ஸ்தோத்திரத்தை கேட்ட சனி பகவான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். நீ கூறிய இந்த ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை தருகிறது.
என்னுடைய அன்புக்கு பாத்திரமானவன் ஆகி விட்டாய். உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் என மகிழ்ச்சியுடன் கேட்டார். இதை கேட்ட தசரதன். இன்று முதல் தேவர், அசுரர், மனிதர், பறவைகள், விலங்குகள் என எந்த ஜீவராசிக்கும் நீங்கள் துன்பம் ஏற்படுத்தக் கூடாது என கேட்டார்.
இதைக் கேட்ட சனி பகவான், உன்னுடைய கோரிக்கை சரியானது தான். ஆனால் ஒரு நிபந்தனை, எனது மனதை மகிழ்ச்சிபடுத்த நீ இப்போது கூறிய இந்த ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாராக இருந்தும், ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ சொல்பவர் யாராக இருந்தாலும் அந்த நிமிடம் அவர்களுக்கு என்னால் ஏற்பட்ட அத்தனை துன்பங்களும் விலகி விடும்.
எனக்குரிய சனிக்கிழமை நாளில் கருப்பு உளுந்து, எள், கருப்பு நிற பசு ஆகியவற்றை தட்சணையோடு தானம் செய்பவர்கள், நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி பூஜை செய்து வணங்குபவர்களை நான் துன்பப்படுத்த மாட்டேன்.
கோசாரத்தின் படியும், ஜென்ம லக்னத்தின்படியும் வரும் எந்த திசையும் கூட என்னால் அவர்களுக்கு துன்பம் வராமல் காப்பேன் என வரம் அளித்தார் சனி பகவான்.
சனிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து பின் பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள் சகல விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள். நீண்ட ஆயுளுடன், நல்ல புத்தியுடன், சகல தோஷங்களில் இருந்து விடுபட்டு வாழ்வார்கள்.