கேரளாவில் டெங்கு-எலிக்காய்ச்சலுக்கு மொத்தம் 8 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் காய்ச்சலால் 2,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கோழிக்கோடு மாவட்டத்தில் 1,488 பேரும், திருவனந்தபுரத்தில் 1,182 பேரும், பாலக்காட்டில் 1,042 பேரும், எர்ணாகுளத்தில் 1,030 பேரும், காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், திருச்சூரில் எலிக்காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு போலவே டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில சுகாதாரத் துறை வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 12,728 நபர்கள் பல்வேறு வகை காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், ஏராளமானோர் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.