முதல் முறையாக புதுச்சேரி -சென்னைக்கு மின்சார பேருந்து
புதுச்சேரி:
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை சாலை (இ.சி.ஆர்.) வழியாக முதன்முறையாக மின்சார பேருந்து சேவையை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி பேருந்து நிலையம், திருமலையடிகள் சாலையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணிக்கு பேருந்து இயக்கப்படுகிறது.
மாற்றாக, சென்னை மதுரவாயல், கோயம்பேட்டில் இருந்து காலை 6, காலை 7, மதியம் 2, மாலை 4, இரவு 7, இரவு11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரியை வந்தடைகிறது.
ஒவ்வொரு நபருக்கும் கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் வரை இந்த பேருந்துகளை தொடர்ந்து இயக்க முடியும். இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகளை தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
41 இருக்கைகள் கொண்ட இந்த சொகுசுப் பேருந்தில் முன்பதிவு செய்வதற்கு சொந்தமாக ஆப் உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.